Published : 18 Nov 2015 04:45 PM
Last Updated : 18 Nov 2015 04:45 PM

யூடியூப் பகிர்வு: இந்தியாவின் ஆர்கோ ஆகுமா ஏர்லிஃப்ட்?

1990-ஆம் ஆண்டு இராக், குவைத் மீது படையெடுத்தது. அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கிட்டத்தட்ட 1,70,000 இந்தியர்கள் 2 மாத காலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால், இதற்கு ராணுவ விமானங்களைப் பயன்படுத்தாமல், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களையே பயன்படுத்தினர். ஏனென்றால் ராணுவ விமானங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மக்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றதாக, இந்தச் செயலுக்கு இந்தியா கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

தற்போது இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ’ஏர்லிஃப்ட்’ என்ற படம் பாலிவுட்டில் தயாராகியுள்ளது. இதில் ரஞ்சித் என்ற தொழிலதிபர் வேடத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. இராக்கின் ஆக்கிரமிப்பு காட்சிகளும், மற்ற ஆக்‌ஷன் காட்சிகளும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஆர்கோ’ (Argo) என்ற திரைப்படமும், கிட்டத்தட்ட இதைப் போல கதையம்சம் உடைய திரைப்படமே. இரானில் மாட்டிக்கொண்ட 6 அமெரிக்க அரசு அதிகாரிகளை எப்படி மீட்டனர் என்பதே அந்தப் படத்தின் கதை. சிறந்த த்ரில்லர் படமாக உருவான 'ஆர்கோ', பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றதோடு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது.

தற்போது பாலிவுட்டின் 'ஏர்லிஃப்ட்டும்', மக்களுக்கு 'ஆர்கோ' தந்த அனுபவத்தை தருமா என 2016, ஜனவரி 22-ஆம் தேதி வரை பொருத்திருந்து பார்க்கவேண்டும். ராஜா கிருஷ்ண மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிம்ரத் கவுர் அக்‌ஷய் குமாரின் மனைவியாக நடித்துள்ளார்.