Last Updated : 23 Oct, 2015 06:06 PM

 

Published : 23 Oct 2015 06:06 PM
Last Updated : 23 Oct 2015 06:06 PM

பாகிஸ்தான் நட்சத்திரங்களுக்கு எதிர்ப்பு: சிவசேனா மீது பாலிவுட் நட்சத்திரங்கள் பாய்ச்சல்

பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்கள், நட்சத்திரங்கள் இந்தியா வருவதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருவதை பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. அடுத்ததாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், அரசியல் தலைவருமான குர்ஷி முகமது கசூரியின் புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகளை செய்த ஒருங்கிணைப்பாளர் சுதீந்திரா குல்கர்னியின் மீது மும்பையில் அந்த அமைப்பினர் கருப்பு மை ஊற்றினர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரமும், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா கட்சியினர் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்தது.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நட்சத்திரங்கள், கலை மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திக்குமுக்காடச் செய்ய வேண்டாம் என்ற வகையில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனுராக் பாஸு: இந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் என்ன கோட்பாடுகள், என்ன முறை, எத்தகைய காரணம் இருக்கிறது? ஒன்றுமே புரியவில்லை. இந்தியாவும் பாலிவுட் உலகமும் ஒன்றிணைந்தது. இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் வந்ததே இல்லை. சினிமா பார்க்க போகும்போது திரையரங்கில் நமக்கு முன்னாலும் பின்னாலும் இருப்பவர் பாகிஸ்தானியரா? அல்லது இந்தியரா? என நாம் கேட்டு தெரிந்துகொள்வதில்லை. பிறகு இப்போது ஏன் இந்த புது குழப்பம்.

பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்பட இயக்குனர் கபீர் கான்: கலை, பண்பாடு போன்றவற்றை அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். நமது துறையில் அதிக எண்ணிக்கையில் பகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவ்வாறு அவர்களை புறக்கணிக்கக் கூடாது.

எம்ரான் ஹஷ்மி: படைப்பாற்றலுக்கு எல்லைகள் கிடையாது. சர்வதேச அளவில் படைப்பாற்றல் கொண்டவர்கள் கொண்டாடப்படுகின்றனர். படைப்பாற்றலை நசுக்க வேண்டாம். அனைத்தையும் ஏற்க வேண்டிய மனநிலை வேண்டும்.

சோஹா அலி கான்: ஒரு கலைஞனாகவும் இந்த நாட்டின் குடிமகளாகவும் கூறுகிறேன். இது மிகவும் தவறானது. இந்தியாவில் இந்த நிலை இருக்கக் கூடாது. எழுத்தாளர்களைப் போல நடிகர் நடிகைகளும் விருதுகளை திருப்பி அனுப்ப வேண்டும். இது தான் நாம் இப்போது செய்ய வேண்டியது.

நடிகை நிம்ரத் கவுர்: இது சுதந்திரமான உலகம். கலைஞர்களின் முக்கிய பெருமையே அவர்கள் எல்லைகள் அற்றவர்கள் என்பது தான். அதிலும் நாம் ஜனநாயக நாட்டில் வளர்ந்திருக்கிறோம். இங்கு மட்டுமல்ல உலகில் எங்குமே இத்தகைய நிலை ஏற்படக் கூடாது.

ஓமங் குமார்: இது நீடிக்கக் கூடாது. தவறான இந்த செயலை யாரும் நீடிக்கவிடப் போவதில்லை. நிச்சயம் அனைவரும் ஒன்றிணைந்து இதனை எதிர்கொள்வோம்.

மோஹித் சூரி: தடைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. கலை என்பது எல்லைகளைத் தாண்டி பறக்க வேண்டும்.

பாடலாசிரியர் ஸ்வானாத் கிர்கிரே: சிவசேனா குறுகிய எண்ணமுடைய கட்சி. அதனை ஒப்புக் கொள்ள அவசியம் இல்லை. கலையால் மட்டுமே கலாச்சாரத்தையும் மக்களையும் ஒன்றிணைக்க முடியும். கலாச்சார பரிமாற்றத்தால் தான் மக்கள் வளர்ச்சியடைகின்றனர். இந்த எதிர்ப்பு ஒரு கட்சியினுடையது.

இந்த நாட்டினுடையது அல்ல. குலாம் அலியின் இசையை கேட்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம். அதனால் தான் குலாம் அலிக்கு இங்கு இத்தகைய வரவேற்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x