Published : 16 Mar 2020 05:52 PM
Last Updated : 16 Mar 2020 05:52 PM
ரோடீஸ் ரெவல்யூஷன் என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில், தன் காதலனை ஏமாற்றிய பெண்ணை ஆதரித்துப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை நேஹா தூபியா பதிலளித்துள்ளார்.
எம் டிவியில் ரோடீஸ் ரெவல்யூஷன் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தப் போட்டியில் ஒரு குழுவின் தலைவராக இருக்கிறார் நேஹா தூபியா. சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட பகுதியில், சக பெண் போட்டியாளரை அடித்ததாக ஒரு ஆண் போட்டியாளரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் நேஹா.
அந்தப் பெண், ஆண் போட்டியாளரின் காதலி. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற ஐந்து ஆண்களுடன் நெருக்கமாகி தனது காதலனை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார். இது தெரிந்து அந்தக் காதலன் அந்தப் பெண்ணை அடித்துள்ளார். ஆனால், அடித்ததற்கு அந்த ஆண் போட்டியாளரைக் கண்டித்த நேஹா, அந்தப் பெண் செய்தது அவளது விருப்பம் என்று அவளது செயல்களை ஆதரித்துப் பேசினார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் நேஹா தூபியாவை போலியான பெண்ணியவாதி என்று வசை பாடி வருகின்றனர்.
இதற்குப் பதிலடியாகக் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் நேஹா தூபியா.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ரோடீஸ் என்ற நிகழ்ச்சியில் நான் கடந்த 5 ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறேன். அதை மிகவும் ரசிக்கவும் செய்கிறேன். இந்த நிகழ்ச்சி என்னை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறந்த ராக் ஸ்டார்களைச் சந்திக்கும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்தது. ஆனால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்து வருபவை எனக்குப் பிடிக்கவுமில்லை. என்னால் ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் வன்முறைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை நான் எடுத்தேன்.
ஒரு நபர் தன்னை ஏமாற்றிய காதலியைப் பற்றியும் பதிலுக்கு அவரை இவர் தாக்கியதையும் ஒப்புக் கொண்டார். அந்தப் பெண் செய்தது அவரது விருப்பம். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. ஏமாற்றுவதை நான் ஆதரிக்கவில்லை. ஆனாலும் பெண்களின் பாதுகாப்புக்கு நான் குரல் கொடுக்கிறேன்.
சோகம் என்னவென்றால், என்னுடைய கருத்துக்கு எதிர்வினையாகத் தொடர்ந்து பல வாரங்கள் கிண்டல்களுக்கு ஆளானேன். என்னுடைய ஒரு பதிவுக்கு 56,000 பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதுவரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் எனக்கு நெருங்கியவர்கள், எனது குடும்பம், என் நண்பர்கள், என்னுடைய சக ஊழியர்கள், என்னுடைய தந்தை ஆகியோரின் தனிப்பட்ட வாட்ஸ் அப்பில் வன்மமும், தாக்குதல்களும் கொண்ட மெசேஜ்கள் நிரம்பி வழிகின்றன. என் மகளின் சமூக வலைதளப் பக்கத்தில் வார்த்தை தாக்குதல்கள் மட்டுமே இருக்கின்றன. இவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எந்த ஒரு உறவு முறையும் ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணின் தனிப்பட்ட தேர்வாகும். ஆனால், என்னவாக இருந்தாலும், அந்தத் தேர்வுகள் உடல்ரீதியான வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது. பிரச்சினை என்னவாக இருந்தாலும் உடல்ரீதியான தாக்குதல்கள் ஏற்புடையவை அல்ல. நிச்சயமாக ஒரு ஆணின் உடல் பலம் என்பது ஒரு பெண்ணை விட பல மடங்கு அதிகம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைதான் நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. மக்களிடம் நான் சொல்வது என்னவென்றால், ஆணோ பெண்ணோ, வீட்டில் நடக்கும் வன்முறையைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தயவுசெய்து உறுதியாக நில்லுங்கள். நீங்கள் தனியாக இல்லை’’.
இவ்வாறு நேஹா தூபியா கூறியுள்ளார்.
— Neha Dhupia (@NehaDhupia) March 14, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT