Published : 26 Jan 2020 03:23 PM
Last Updated : 26 Jan 2020 03:23 PM
ஸ்ரீகாந்த்தாக மாறிய தருணத்தை, லண்டனில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்திப் பேசினார் ஜீவா.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜனவரி 25) நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் கபில்தேவ், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராகக் கமலும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ஜீவா பேசும் போது "18 ஆண்டுகளுக்கு முன்பு கமல் சார் இதே மேடையில் என்னை அறிமுகப்படுத்தினார். தற்போது இதே மேடையில் அவர் முன்பு நிற்கும் போது பெருமையாக இருக்கிறது. கபீர் சார் தான் இந்தப் படத்துக்காக என்னை அழைத்தார். மும்பைக்குச் சென்று சந்தித்தேன்.
ஸ்ரீகாந்த் ரோல் நீங்கள் பண்ணுகிறீர்கள் என்றவுடன் பக்கென்று ஆகிவிட்டது. ரொம்பவே தயங்கிய என்னை, நிறைய தகவல்கள் கொடுத்து உத்வேகம் அளித்தார். பின்பு இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தேன். முதல் நாள் தர்மசாலா மைதானத்தில் படப்பிடிப்பின் போது, கபில்தேவ் சார் வந்திருந்தார். அப்போது ஸ்ரீகாந்த் சார் குறித்து நிறைய விஷயங்கள் சொன்னார்.
பின்பு இங்கிலாந்தில் 3 மாதம் படப்பிடிப்பு நடத்தினோம். முதலில் சில நாட்கள் ரொம்ப அமைதியாகவே இருந்தேன். ஏனென்றால் இதைச் சரியாகச் செய்துவிடுவோமா என்ற பயம் தான். இங்கிலாந்தில் முதல் நாள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியைப் படமாக்கினார்கள். பின்பு பேக்கப் சொல்லிவிட்டார்கள். ரூமுக்கு வந்தவுடன் சரியாக நடிக்க வேண்டும் என்று சிகரெட் எடுத்துப் பற்றவைத்தேன். அவரை மாதிரி வசனம் பேசி 3 நிமிடங்கள் வரை சிகரெட் பிடித்தேன்.
அலாரம் அடித்துவிட்டது. 19-வது மாடியில் இருந்த எங்களைக் கீழே வரச்சொல்லிவிட்டார்கள். முதல் நாள் படப்பிடிப்பிலே இப்படியாகிவிட்டதே என்று ஹோட்டலிலிருந்து கீழே இறங்கிவந்தேன். அங்கு கபீர் சார், ரன்வீர் சிங் உள்ளிட்ட அனைவருமே நின்று கொண்டிருந்தார்கள். 'யார் புகைபிடித்தது' என்று கேட்டார்கள். அனைவருமே என்னைக் கைகாட்டினார்கள். அப்போது தான் நான் ஸ்ரீகாந்த் ஆகிவிட்டேன் என்று நம்பினேன்.
அதற்குப் பிறகு எல்லாமே ஒரு டேக் அல்லது 2-வது டேக்கில் முடித்துவிடுவேன். முதலில் இந்தப் படத்துக்கு ரன்வீர் சிங்கிற்கு நன்றிச் சொல்ல வேண்டும். ரொம்ப சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரால் தான் இந்தப் படம் நடந்துள்ளது. இந்தப் படத்துக்காக சென்னையில் ஸ்ரீகாந்த் சாரைச் சந்தித்தேன். அப்போது 'டேய் கண்ணை மூடிட்டு சுத்துடா.. பட்டா பாக்கியம்.. படலைன்னா லேகியம்' என்றார்" என்று பேசினார் ஜீவா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT