Published : 14 Jan 2020 06:40 PM
Last Updated : 14 Jan 2020 06:40 PM

ஐஎம்டிபியில் குறைந்த ’சப்பாக்’ படத்தின் மதிப்பீடு: தீபிகாவுக்கு எதிரான சதியா?

தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ’சப்பாக்’ படத்தின் ஐஎம்டிபி இணையதள மதிப்பீடு அளவு குறைந்துள்ளது. இது தீபிகாவுக்கு எதிரான சதி என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த லக்‌ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ’சப்பாக்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடித்துள்ளார். விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ள ’சப்பாக்’ நகர்ப்புறங்களில், மல்டிப்ளெக்ஸ்களில் நன்றாக வசூலித்து வருவதாகப் பாலிவுட் வர்த்தக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, அந்த பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்டதால் அவரது ’சப்பாக்’ திரைப்படம் சிலரால் மறைமுகமாகத் தாக்கப்பட்டுள்ளது. சப்பாக் படத்தைப் புறக்கணிப்போம் என்ற #BoycottChhapaak ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

மேலும் ஐஎம்டிபி இணையதளத்தில் ’சப்பாக்’ படத்துக்கு பல்வேறு கணக்குகளிலிருந்து மோசமான விமர்சனங்களைச் சிலர் எழுதி வருகின்றனர். இதனால் இந்தப் படத்தின் மதிப்பீடு குறைந்து வருகிறது. இதுவரை அந்தப் படம் பெற்றுள்ள 6,900 வாக்குகளில் 4,000 வாக்குகள் அந்தப் படத்துக்கு 1 மதிப்பெண்ணை மட்டுமே கொடுத்துள்ளன. இதனால் 10க்கு 4.4 என்ற அளவில் சப்பாக் மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தீபிகா ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்துகொண்டதால் ஒரு கூட்டம் வேண்டுமென்றே செய்யும் வேலை என தீபிகாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் தீபிகா படுகோன் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x