Published : 30 Dec 2019 02:07 PM
Last Updated : 30 Dec 2019 02:07 PM

விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்: ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கங்கணா தரப்பு நோட்டீஸ்

2019-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியல் தொடர்பாக, கங்கணா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2019-ம் ஆண்டு இந்தியப் பிரபலங்களின் ஆண்டு வருமானம், புகழ் மற்றும் சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பு ஆகியவற்றை வைத்து பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 252.72 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. நடிகர்களில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமான ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் கங்கணா ரணாவத் 17.5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 70-வது இடத்தில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில். அதில், "ஃபோர்ப்ஸ் இந்தியா ஒரு ஏமாற்றுப் பத்திரிகை. அவர்கள் பத்திரிகையில் பதிப்பித்திருக்கும் நட்சத்திரங்களின் வருமானப் பட்டியலில் ஒன்றையாவது அவர்களால் நிரூபிக்க முடியுமா என்று நான் வெளிப்படையாகச் சவால் விடுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த வருமானத்தை விட அதிகமாக கங்கணா வரி கட்டுகிறார். யார் எவ்வளவு வரி கட்டினார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?" என்று தெரிவித்திருந்தார் கங்கணாவின் சகோதரி.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கங்கணாவின் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில் கூறியிருப்பதாவது:

அன்பார்ந்த ஃபோர்ப்ஸ் இந்தியா, எங்கள் சட்டக் குழு உங்களுக்கு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. இன்னும் உங்களிடமிருந்து பதில் வரவில்லை. கங்கணாவின் வருமானம், நிதி மதிப்பு ஆகியவற்றை நீங்கள் யார் மூலமாக, எதன் மூலமாகத் தெரிந்து கொண்டீர்கள் என்று தயவுசெய்து சொல்லுங்கள். வேகமாகப் பதிலளியுங்கள் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்.

ஒருவர் சமூகத்திலிருந்து எவ்வளவு எடுத்துக் கொள்கிறார் என்பதை வைத்து அவரை மதிப்பிட முடியாது. ஆனால் சில மேற்கத்திய ஊடகங்கள், இந்தியர்கள் முழு முதலாளித்துவவாதிகளாக மாற வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான் கங்கணா அவர்களை வெறுக்கிறார். இப்படியான ஆங்கிலேயச் சிந்தனை இருக்கும் மக்களை நாம் சேர்ந்து தூக்கி எறிய வேண்டும்''.

இவ்வாறு கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x