Published : 28 Oct 2019 08:17 PM
Last Updated : 28 Oct 2019 08:17 PM

சிறைக்குச் சென்ற அனுபவம்: ஷாருக்கானின் சுவாரசிய பகிர்வு

ஷாரூக் கான் தான் ஒரு முறை கைது செய்யப்பட்டு சில மணி நேரங்கள் சிறையிலிருந்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல அமெரிக்க தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேனின் நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக, பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் கலந்து கொண்டுள்ளார். பல்வேறு சுவாரசியமான, இதுவரை பலருக்கு தெரியாத தகவல்களை ஷாரூக்கான் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

ஷாரூக் கானின் ஆரம்ப நாட்களில் அவர் நடித்த படம் குறித்தும், சக நடிகை குறித்தும் தவறாக ஒரு செய்தி வந்தது குறித்து டேவிட் லெட்டர்மேன் ஷாருக்கானின் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையில்,

"என்னை அந்த செய்தி பாதித்தது. அப்போது நான் துறைக்குப் புதிது. ஒவ்வொரு செய்திக்கும் எதிர்வினையாற்றுவேன். நல்லவேளையாக அப்போது சமூக ஊடகங்கள் இல்லை. பத்திரிகைகள் மட்டுமே. அந்த செய்தி பார்த்து எனக்கு கடும் கோபம் வந்தது. அந்த பத்திரிகையின் ஆசிரியரை அழைத்துப் பேசினேன். அதை 'விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாதா' என்று அவர் கேட்டார். 'எனக்கு அந்த செய்தி நகைச்சுவையாகத் தெரியவில்லை' என்று சொன்னேன். நேரடியாக அவர்களின் அலுவலகத்துக்கே சென்று நிறையச் சத்தம் போட்டேன். அடிப்பேன் என்று மிரட்டினேன். 'உன் உடையைக் கிழித்து அம்மணமாக நிற்க வைப்பேன், அதை விளையாட்டாக எடுத்துக்கொள்வாயா' என்று அச்சுறுத்தினேன்.

இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது அது தவறாகத்தான் தெரிகிறது. ஆனால் நாம் கோபத்தில் இருக்கும் போது நாம் என்ன பேசுவோம் என்று தெரியாது.இதைத் தொடர்ந்து என்னைச் சிறையில் அடைத்தார்கள்.

நான் ஒரு படப்பிடிப்பிலிருந்தேன். போலீஸ் வந்தார்கள். அவர்கள் அமைதியாக உட்கார்ந்து 'உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்' என்றார்கள். 'என் காரில் சென்று கொண்டே பேசலாமா' என்று உற்சாகமாகக் கேட்டேன். ஏனென்றால் என்னை சந்திக்க வருபவர்கள் அனைவரும் என் ரசிகர்கள்தான் என்று நான் நினைப்பேன். 'இல்லை எங்கள் காருக்கு வாருங்கள்' என்று அவர்கள் சொன்னார்கள். 'பரவாயில்லை என் காரிலேயே வரலாம்' என்றேன்.

என்னைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றார்கள். அதில் ஒரு சின்ன சிறை அறை. அங்குக் குப்பை, மனிதக் கழிவுகள் என அசிங்கமாக இருந்தது. அதைப் பார்த்ததும் 'தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள், இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன். நான் அவரிடம் சாரி கேட்டுவிடுகிறேன்' என்று போலீஸிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன். அன்று மாலை என்னை ஜாமீனில் வெளியே விட்டார்கள். மீண்டும் அந்த பத்திரிகை ஆசிரியரை அழைத்து, நான் ஜெயிலில் இருக்கிறேன். எனக்குப் பயமில்லை. ஆனால் நீ பயத்துடன் இரு என்று மீண்டும் மிரட்டினேன்.

ஆனால் வெளியே வந்ததும், மற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லவில்லை. எளிதாக போலீஸை சமாளித்துவிட்டேன் என்று சொன்னேன். இரவு அந்த பத்திரிகை ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுக்கு வெளியே நிறைய போலீஸ் இருந்தனர். அவர்கள் எதற்கு அங்கு நிற்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. என்னால் தான் பிரச்சினை என்று தெரியாது.

நான் சென்றதும் 'ஷாரூக் எப்படி இருக்கிறீர்கள்' என்று விசாரித்தார்கள். அவர்களில் ஒருவரிடமே சிகரெட்டுக்கு தீப்பெட்டி கேட்டு, அந்த பத்திரிகை ஆசிரியர் வீட்டுக்குள்ளே இருந்து ஜன்னல் வழியாக என்னைப் பார்க்கும்போது, சிகரெட்டை பற்றவைத்து, முறைத்துக் கொண்டே சென்று விட்டேன்" என்று தெரிவித்துள்ளார் ஷாரூக் கான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x