Published : 16 Oct 2019 05:27 PM
Last Updated : 16 Oct 2019 05:27 PM

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் வாழ்க்கைக் கதையும் படமாகிறது: அஷ்வினி திவாரி இயக்குகிறார்

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இந்தப் படத்தை அஷ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.

'நீல் பட்டே சன்னாட்டா' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'அம்மா கணக்கு' படத்தையும் இவரே இயக்கியிருந்தார். பின் இந்தியில் இவர் இயக்கிய 'பரேலி கி பர்ஃபி' திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

தற்போது கபடி விளையாட்டை மையமாக வைத்து கங்கணா ரணாவத் நடிப்பில், 'பங்கா' என்ற படத்தை அஷ்வினி இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும், இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் நாராயணமூர்த்தி மற்றும் அவர் மனைவி சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளார். 'மூர்த்தி' என்று தலைப்பிட்டிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதா மூர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அஷ்வினி பகிர்ந்துள்ளார்.

"இரண்டு எதிரெதிர் ஆளுமைகள். நாராயணமூர்த்தியுடன் இருக்கும் புகைப்படம் என்னிடம் இல்லை. ஆனால் சுதா மாவுடன் பல மணி நேரங்கள் பேசினேன். ஆம், அப்படித்தான் அவரை நான் இப்போது கூப்பிட ஆரம்பித்திருக்கிறேன்.

21 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். நிகழ்ச்சிகள், லோகோக்களை வடிவமைத்து அதே நேரத்தில் கலைப் பயிற்சி பள்ளியில் படித்து வந்தேன். ஓவியம் வரையத் தேவையான பொருட்களை வாங்கவும், என் கல்விக்கும் பணம் தேவைப்பட்டது. அப்போது லியோ பர்னட்டில் சேர்ந்தேன். 16 வருடங்கள் விளம்பர உலகில், இன்றுவரை என் பிரியமான நண்பர்களாக இருக்கும் அற்புதமான மனிதர்களுடன் பயணித்தேன். 2015-ல் விளம்பரத்துறையை விட்டுவிட்டு, பாலிவுட் என்ற தெரியாத உலகுக்கு வந்தேன். கதை சொல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன்.

வாழ்க்கையை நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி போல வாழ வேண்டும் என்று கனவு கண்டிருந்தேன். அவர்கள் வாழ்க்கைத் தேர்வுகள், நேர்மையுடன் வாழ்வது ஆகியவைதான் எனக்கு மிகப்பெரிய உந்துதல். மூர்த்தி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததில் என்னுள் நன்றி நிறைந்துள்ளது. அவர்களின் அசாத்தியக் கதையைச் சொல்ல என்னை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. இது படம் என்பதையும் தாண்டி, இது ஒரு வாழ்க்கை" என்று கூறியுள்ளார்.

1981ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் என்ற ஐடி நிறுவனத்தை ஆரம்பித்தார் நாராயணமூர்த்தி. டெல்கோ நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண் இன்ஜினியர் சுதா. இவர்களின் இருவரின் அறப்பணிகள் பிரபலமானவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x