Published : 15 Oct 2019 03:07 PM
Last Updated : 15 Oct 2019 03:07 PM
'ஜெர்சி' திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர் நடித்த அந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்காவே இயக்கினார். 'கபீர் சிங்' என்ற பெயரில் வெளியான இந்தி ரீமேக்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தீப் வங்கா அடுத்த படத்தை இந்தியிலேயே இயக்கவுள்ளார். அப்படம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
'கபீர் சிங்' வெற்றிக்குப் பிறகு ஷாகித் கபூர் எந்தவொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். தற்போது இந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெர்சி' படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஷாகித் கபூர் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஜெர்சி' படத்தை இயக்கிய கெளதம் இந்தி ரீமேக்கையும் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை அல்லு அரவிந்த், அமன் கில் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரிக்கவுள்ளனர். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகவுள்ளது.
கெளதம் இயக்கத்தில் உருவான 'ஜெர்சி' படத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்திருந்தார். தமிழிலும் இந்தப் படத்தின் ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. விஷ்ணு விஷால், அமலா பால் நடிக்கவுள்ள இந்தப் படத்தை 'மான்ஸ்டர்' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT