Published : 24 Sep 2019 07:48 PM
Last Updated : 24 Sep 2019 07:48 PM

'சாந்த் கி ஆங்க்' ட்ரெய்லருக்கு தொடர்ந்த கிண்டல்கள்: தாப்ஸி கடும் சாடல்

'சாந்த் கி ஆங்க்' ட்ரெய்லரைக் கிண்டல் செய்தவர்களை தாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'சாந்த் கி ஆங்க்'. துஷார் ஹிரானந்தானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தாப்ஸி, பூமி பெட்நேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்திரோ டோமா மற்றும் பிரகாஷி தோமர் இருவரும் தங்களின் 65-வது வயதுக்குப் பிறகு துப்பாக்கி சுடுதலில் 30க்கும் மேற்பட்ட சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளனர். சமூகக் கற்பிதங்களை உடைத்து இவர்கள் இருவரும் எப்படி தங்கள் இலக்கை அடைந்தனர் என்பதே இப்படத்தின் கதை.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 23) வெளியிடப்பட்டது. இதற்குப் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதே வேளையில், தாப்ஸி மற்றும் பூமி பெட்நேகர் ஆகியோரின் மேக்கப் குறித்தும், வயதானவர்களாக நடித்தது குறித்தும் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். மேலும், வயதானவர்களைத் தான் இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

கிண்டல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிண்டல் செய்தவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக தாப்ஸி கூறியிருப்பதாவது:

எனக்கு என்ன ஆச்சரியமாக இருக்கிறது என்றால், நாம் நேர்மறைத்தன்மையை என்றாவது ஆரத்தழுவிக்கொள்வோமா அல்லது புதிய முயற்சிகளை மேற்கொள்ள நாம் பயப்படுவதை மறைக்க, எதிர்மறைத்தன்மையை மட்டுமே பிடித்துக் கொண்டு அதைப் பெரிதாகப்போகிறோமா?

தங்களுக்கு சவுகரியமான சூழலிலிருந்து வெளியே வந்து மாற்றத்தை முன்னெடுப்பவர்களை ஆதரிக்க முடியாத வகையில் நம் தோள்களோடு முதுகெலும்பையும் தொலைத்துவிட்டோமா? அல்லது இவை அனைத்தும், துறையில் கிட்டத்தட்ட ஆரம்ப நிலையில் இருக்கும், மற்றவர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகச் சொல்லப்பட்ட ஒன்றை முன்னெடுக்கும் இரண்டு பெண்களுக்காக மட்டுமா?

எனக்கு என்ன ஆச்சரியமாக இருக்கிறது என்றால், இதே கேள்வியை 'சாரான்ஷ்' படத்தில் நடித்த அனுபம் கேரிடம் கேட்டோமா?, நர்கிஸ் தத் சுனில் தத்தின் தாயாக நடித்தபோது கேள்வி கேட்டோமா?, ஜான் ட்ரவோல்டா, 'ஹார்ஸ்ப்ரே' படத்தில் பெண்ணாக நடித்தபோது கேள்வி கேட்டோமா?, 'கமிங் டு அமெரிக்கா' படத்தில் வெள்ளை யூதராக நடித்த எட்டி மர்ஃபியை கேள்வி கேட்டோமா?, ’3 இடியட்ஸ்’ படத்தில் கல்லூரி இளைஞராக நடித்த ஆமிர்கானை கேள்வி கேட்டோமா?, எதிர்காலத்தில், 'சுப்மங்கள் ஸாய்தா சாவ்தான்' படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடிக்கவுள்ள ஆயுஷ்மன் குரானாவை கேள்வி கேட்கப் போகிறோமா?. அல்லது இந்த அருமையான குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் எங்களுக்கு மட்டும் தானா?

அது அப்படி இருந்தாலும் கூட உங்களுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி. உங்களுக்குச் சற்று வித்தியாசமாக, சற்று புதிதாக, நீங்கள் அனைவரும் கருத்து கூறும் வகையில், ஏதோ ஒரு வகையில் உங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையில், உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் செய்த எங்கள் சின்ன முயற்சியைப் பார்த்ததற்கு நன்றி. சினிமா அதற்காகத்தான். விவாதங்கள் தொடரட்டும். உங்கள் கேள்விகளும், சந்தேகங்களும் இந்த தீபாவளி அன்று தீர்ந்துவிடும். எங்கள் சின்ன படத்துக்கு, பெரிய இதயத்துடன் நீங்கள் தந்திருக்கும் கவனத்துக்கும், அன்புக்கும் நன்றி.

இவ்வாறு தாப்ஸி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x