Published : 05 Aug 2019 04:39 PM
Last Updated : 05 Aug 2019 04:39 PM

ஸாய்ரா வாசிம் நடிக்காதது திரைத்துறைக்கு இழப்பு: ’தங்கல்’ இயக்குநர்

நடிகை ஸாய்ரா வாசிம் நடிப்பைக் கைவிட்டது கலைத்துறைக்கு ஒரு இழப்பு என்று கூறியுள்ளார் இயக்குநர் நிதேஷ் திவாரி.

'தங்கல்' படம் மூலம் நடிகை ஸாய்ரா வாசிம்மை அறிமுகம் செய்தவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. தொடர்ந்து ஆமிர் கான் தயாரிப்பில் 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' என்ற படத்திலும் ஸாய்ரா நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக சீனாவில் இரண்டு படங்களும் வசூல் சாதனை படைத்தன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், மத ரீதியான காரணங்களுக்காக தான் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகை ஸாய்ரா வாசிம் அறிவித்தார். தனது வேலை தொடர்ந்து தனது மதத்துடன் தனக்கிருக்கும் உறவை அச்சுறுத்தியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இது குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேசியுள்ளார்.

"இதுகுறித்து கேள்விப்பட்ட போது ஒரு இழப்பு போல உணர்ந்தேன். அவர் அற்புதமான நடிகை. அது தங்கலிலும், சீக்ரெட் சூப்பர் ஸ்டாரிலும் நன்றாகத் தெரிந்தது. நான் மற்றவர்களை விட சற்று அதிகமாகவே வருத்தப்பட்டேன். ஏனென்றால் திரைத்துறை மட்டும் ஒரு திறமையை இழக்கவில்லை, எனக்கும் அது இழப்புதான். ஏனென்றால் என் படத்தில் தான் அவர் அறிமுகமானார்.

ஒருவருக்கு அவரது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க, எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்ய உரிமை இருக்கிறது என்பதை எப்படியும் நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும். வாழ்க்கையில் உங்கள் தேர்வுகளை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைப்பது போலதான் அவரது தேர்வு பற்றியும் நாம் கேள்வி கேட்கக்கூடாது.

அது அவரது வாழ்க்கை. அதன் முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது. அவர் தேடுவது அவருக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் அவர் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை எப்போதும் சொல்வேன்" என்று நிதேஷ் திவாரி கூறியுள்ளார். 

ஸாய்ரா வாசிம் நடித்துள்ள 'தி ஸ்கை இஸ் பின்க்', அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x