Published : 03 Aug 2019 07:34 AM
Last Updated : 03 Aug 2019 07:34 AM
புதுடெல்லி
இந்தித் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் கூறிய செல்போன் நம்பரால் டெல்லியைச் சேர்ந்த இளைஞருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது சன்னி லியோனின் நம்பர் என்று எண்ணிய ரசிகர்கள் அவரைத் தொடர்புகொண்டு வருகின்றனர். இதனால் அவருக்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டில் ஆபாச படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை சன்னி லியோன். பின்னர் அவர் மும்பையில் குடியேறி தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் சன்னி லியோன். தற்போது அவர் தமிழில் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இந்திப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரோகித் ஜுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ என்ற இந்திப் படம் அண்மையில் வெளியானது. இதில் நடிகர் தில்ஜித், நடிகை கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு செல்போன் நம்பரை கூறுவார். இந்த செல்போன் எண்ணை நடிகை சன்னி லியோனுடையது என்று தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள் தொடர்ந்து அந்த எண்ணுக்கு போன் செய்துள்ளனர். சுமார் 500-க்கும் அதிகமான போன் கால்கள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த செல்போன் எண்ணுக்கு சொந்தமான டெல்லியைச் சேர்ந்த புனித் அகர்வால் என்ற இளைஞர் டெல்லி மவுர்யா என்கிளேவ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கமாக திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் யாருக்காவது செல்போன் எண்ணை கூறுவதுபோல் காட்சி வைக்கப்பட்டால் அந்த செல்போன் எண் உபயோகத்தில் இல்லாத எண்ணாக இருப்பது வழக்கமாகும். ஆனால் இந்தப் படத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எண் பயன்படுத்தப்பட்டது சிக்கலாகி விட்டது.
அந்தத் திரைப்படத்தில் சன்னி லியோன் கூறியது அவரது உண்மையான செல்போன் எண் என எண்ணி தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் புனித் அகர்வாலுக்கு வருகின்றன. இது சன்னி லியோனின் எண் இல்லை என்று கூறியும் ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்து வருகின்றனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அவர் கூறும்போது, “இது சன்னி லியோன் போன் இல்லை என்று கூறியும், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஆரம்பத்தில் 500-ஆக இருந்த அழைப்புகள், தற்போது 100-ஆகக் குறைந்துள்ளன. பேசும் நபர்கள் சன்னி லியோனுடன் பேசியே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். அதிகாலையில் அடிக்கத் தொடங்கும் எனது செல்போன் நள்ளிரவு ஆனாலும் ஓய்வதில்லை. சன்னி லியோனின் நம்பர் இல்லை என்று கூறினால் அதைத் தொடர்ந்து அந்த ரசிகர்கள் என்னைத் திட்ட ஆரம்பிக்கின்றனர்.
இதனால் இப்போது நான் ஒரு தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். யாராவது போன் செய்தால், சன்னி லியோன் குளித்துக் கொண்டிருக்கிறார். அவரால் இப்போது பேச இயலாது என்று கூறி விடுகிறேன்.
எண்ணை மாற்ற முடியாது
ஆனாலும் செல்போன் அழைப்புகள் நின்றபாடில்லை. எனவே, இந்தப் படத்தைத் தயாரித்த நபர்கள் மீது வழக்குத் தொடரலாமா என்று யோசித்து வருகிறேன். அப்போதாவது படத்தில் அந்த செல்போன் எண் வரும் காட்சியை நீக்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த செல்போன் எண்ணையும் என்னால் மாற்ற முடியாது. இதனால் என்னுடைய வர்த்தகம் பாதிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT