Published : 09 Jun 2015 03:58 PM
Last Updated : 09 Jun 2015 03:58 PM
'அமர் ஹை' என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசனும், பாலிவுட் நட்சத்திரம் சைஃப் அலி கானும் இணையவுள்ளார்கள். கமல்ஹாசன் இயக்கவுள்ள இந்தத் திரைப்படம் நிகழ்கால அரசியல், பணபலம் மற்றும் நிழல் உலகத்தைப் பற்றியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கமல் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் வீரேந்திர கே அரோரா, அர்ஜுன் என் கபூர் கூறுகையில்,"'அமர் ஹை' எங்களுக்கு பல விதங்களில் விசேஷமான படம். நீண்ட நாட்கள் கழித்து கமல்ஹாசன் பாலிவுட்டுக்கு திரும்புகிறார். அதோடு நடிகர், இயக்குநர், கதாசிரியர் எனப் பல துறைகளில் அவர் பணியாற்றவுள்ளார். மேலும், கடந்த 6 வருடங்களாக இந்தக் கதையை எழுதிவரும் கமல், ஆரம்பம் முதலே சைஃப் அலி கான் தான் நடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்" என்றனர்.
மும்பையில் தொடங்கும் கதை பல்வேறு நாடுகளுக்கு பயணப்படுகிறது. கமலும், தயாரிப்பாளர்களும் மும்பை, புதுடெல்லி, லண்டன், துபாய், ஜோர்டான், அமெரிக்கா ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடத்த இடங்களை பார்த்து வருகின்றனர்.
தனது கதாபாத்திரம் தொடர்பாக பேசிய கமல், "எனது பாத்திரம் வழக்கமான எதிர்நாயகனாக இல்லாமல் புதிய கோணத்தைத் தரும்" என்றார்.
தற்போது 'தூங்காவனம்' படப்பிடிப்பில் இருக்கும் கமல், அடுத்து 'பாபநாசம்' படத்தின் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறார். 'அவ்வை சண்முகி' படத்தின் இந்தி பதிப்பான 'சாச்சி 420' படத்துக்குப் பிறகு, 18 ஆண்டுகள் கழித்து நேரடியான இந்திப் படம் ஒன்றில் கமல் நடிக்கவுள்ளார். 'விஸ்வரூபம்' உள்ளிட்ட அவரது படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டே வெளியாகின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT