Published : 17 Aug 2017 03:36 PM
Last Updated : 17 Aug 2017 03:36 PM
இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறு தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் அக்ஷய் குமார் 3 நிமிடக் காணொலி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ''நண்பர்களே நேற்று (ஆக.15) 70 ஆண்டு கால சுதந்திரத்தைப் பெருமையோடும் மரியாதையோடும் கொண்டாடினோம்.
உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பெருமைப்படுத்தும் மக்களோடு என்றாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கிறீர்களா? ஒவ்வொரு ஆண்டும் நமக்கு சுதந்திரத்தைப் பரிசளிக்க, எல்லைக் கோட்டில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறீர்களா?
நம்மைக் காப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தன் இன்னுயிரை இழக்கும் வீரர்களின் செய்திகளைத் தினந்தோறும் பார்க்கிறோம், கேட்கிறோம்.
இதோ இப்போது நமக்கான கடமை ஒன்று இருக்கிறது. தேசத்துக்காக உயிர் துறந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு நேரடியாக நன்கொடை அளிக்க உள்துறை அமைச்சகம் புதிய வலைதளத்தை உருவாக்கி உள்ளது. அதன் இணைப்பு - bharatkeveer.gov.in
ஆகஸ்ட் 16-ம் தேதியான இன்று, இந்த வலைதளத்தில் 114 வீரர்கள் குறித்த புகைப்படங்களும் விவரங்களும் உள்ளன. உங்கள் அனைவரையும் ஒன்று வேண்டிக் கொள்கிறேன். அடுத்த 6 மாதத்தில் 114 வீரர்களின் குடும்பங்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டும். அதன்மூலம் அவர்களின் தகவல்கள் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவர்கள் அங்கே இருப்பதால்தான் நாம் இங்கே இருக்கிறோம். இத்தகைய வீரம்மிகு நெஞ்சங்களை மதிப்பதைக் காட்டிலும் வேறெதுவும் முக்கியம் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து இதை சாத்தியமாக்குவோம், ஜெய்ஹிந்த்'' என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''பாரத தேசத்தின் வீரர்களுக்கு உங்களின் ஆதரவை அளித்தமைக்கு நன்றி'' என்று குறிப்பிட்டு அக்ஷய் குமாருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT