Published : 26 Sep 2016 05:13 PM
Last Updated : 26 Sep 2016 05:13 PM
பாகிஸ்தான் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில், பாகிஸ்தான் கலைஞர்களைக் குறிவைக்காதீர்கள் என்று பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை பாலிவுட் திரையுலகமும் சின்னத்திரை சேனல் தயாரிப்பாளர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், நடிகர் சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பாலிவுட் திரைத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். எம்.என்.எஸ். கட்சியின் இந்த பார்வை தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வராது என்றும் கூறியுள்ளனர்.
தங்கள் கட்சியினர் வானொலி நிலையத்துக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் சென்று பாகிஸ்தான் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு கூறியதாகவும், அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் மகாராஷ்டிர நவநிர்மாண சேனாவின் திரைப்பிரிவு நிர்வாகி ஷாலினி தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பாடகர் அதிஃப் அஸ்லாம், வானொலி நிலையத்துக்கு அளிப்பதாக இருந்த பேட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் இருந்து காமெடி நடிகர்கள் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சியும் ரத்தாகியுள்ளது. நவநிர்மாண் சேவா கட்சியினர் நேரில் சென்று பேசியதாலேயே இந்த நிகழ்ச்சிகள் ரத்தாகியதாகக் கூறப்படுகிறது.
எதிர்ப்பு அச்சுறுத்தல்
இதுகுறித்து மேலும் பேசிய ஷாலினி தாக்கரே, ''அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சேனல் நிர்வாகத்துக்கும் பாகிஸ்தான் நடிகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். அதை அவர்கள் மீறும்பட்சத்தில் எங்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். போராட்ட விளைவுகளுக்கு கட்சி எவ்விதத்திலும் பொறுப்பாகாது'' என்று தெரிவித்துள்ளார்.
இது தீர்வு கிடையாது
''தலைமை சக்திகள் ஒன்றாக இணைந்து சூழ்நிலையைச் சரிசெய்ய வேண்டும். திறமை மீதோ கலை மீதோ தடை விதிப்பது எந்த விதத்திலும் வன்முறைக்கான தீர்வாக அமையாது'' என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
இவர் இயக்கிவரும் 'ஐ தில் ஹை முஷ்கில்' படத்தில், பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஓபராய், ''கலைஞர்கள் தீவிரவாதிகளாக நடத்தப்படக்கூடாது. பாகிஸ்தான் கலைஞர்கள், கலைஞர்கள்தான். தீவிரவாதிகள் அல்ல. வன்முறையில் அவர்களின் பங்கு என்ன இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT