Published : 13 Nov 2014 01:12 PM
Last Updated : 13 Nov 2014 01:12 PM
பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் வீதிகளில் துடைப்பம் ஏந்த பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் மறுத்துள்ளார்.
'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இதுவரை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு குறிப்பிட்ட பகுதிகளை சுத்தம் செய்து, இந்தத் திட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் நேரடியாக இணைய முடியாது என்று ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.
முதலில் தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தன் உள்ளத்தையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பதைக் கடமையாகக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் செயல்படும் அனைவரையும் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டத்தையொட்டி வீதியில் துடைப்பம் ஏந்த விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.
அதாவது, தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ், மிரிதுலா சின்ஹா, மேரிகோம் உள்ளிட்ட பல பிரபலங்கள், தனி நபர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT