Last Updated : 08 Jun, 2016 07:00 PM

 

Published : 08 Jun 2016 07:00 PM
Last Updated : 08 Jun 2016 07:00 PM

உட்தா பஞ்சாப் படத்தில் 89 வெட்டு- அரசியல் நெருக்கடி குற்றச்சாட்டுக்கு சென்சார் தலைவர் மறுப்பு

“ஆம் ஆத்மியிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுராக் காஷ்யப் பஞ்சாப் மாநிலத்தை மோசமாக சித்தரித்துள்ளார்” என்று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி கூறியுள்ளார்.

அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்துள்ள ‘உட்தா பஞ்சாப்’ படத்தை வெளியிடுவது தொடர்பாக பஞ்சாப் அரசு தனக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்/று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பஞ்சாப் மாநிலம் போதை மருந்து வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக எழுந்த செய்திகளையடுத்தே கடும் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் ஃபேண்டம் பிலிம்ஸ் விவகாரத்தை கோர்ட் ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில் அரசியல் தலைவர்களோ, சென்சார் வாரியத் தலைவர் பஞ்சாப் அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்’ என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சென்சார் வாரியத்தின் மீது சாடல் மழை பொழிந்துள்ளார்.

ஆனால் சென்சார் வாரியத் தலைவர் நிஹலானியோ, “அனுராக் காஷ்யப் ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மியின் ஆஷிஷ் கேத்தன் கூறும்போது, “உட்தா பஞ்சாப் பட விவகாரத்தில் மோடி அரசு தனது கறைபடிந்த அரசியல் விளையாட்டை விளையாடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

சென்சார் வாரியத் தலைவர் நிஹலானி ‘சர்வாதிகாரி’ போல் செயல்படுகிறார் என்று அனுராக் காஷ்யப் கூறியது குறித்து நிஹலானியிடம் கேட்ட போது, “இது அவரது சொந்தக் கருத்து. அது அவரது தெரிவு. பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர், இது அவர்களது பொறுப்பு. ஆனால் ஒரு படம் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லும் போது அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் வழிதான் நாங்கள் இயங்க முடியும்” என்றார்.

தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு நிஹலானி கூறும்போது, “அவர்கள் உரிமைத் துறப்ப்பு வாசகங்களைச் சேர்த்திருந்தாலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்றாலும் ஒட்டுமொத்த படமும் பஞ்சாப் பற்றியதாக உள்ளது, பெயர்கள் பஞ்சாப் பெயர்களாக இருக்கின்றன. எனவே எங்களுக்கான காரணங்கள் உள்ளன, விதிமுறைகளின் படி நாங்கள் ‘கட்’ செய்யலாம். அதனால்தான் கட் செய்தோம்.

படத்திலிருந்து நீக்கிய காட்சிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய கடிதத்தை நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் அளிக்க மறுக்கவில்லை, அவர்கள்தான் கடிதத்தை பெறவில்லை. ஆனால் நேராக ஊடகங்களிடம் சென்று விவகாரத்தை பெரிது படுத்துகின்றனர்.

நாங்கள் படத்தயாரிப்பாளர்களை திங்களன்று சந்தித்து நீக்கிய பகுதிகள் குறித்து தெரிவித்தோம். அதற்கு அவர்களும், நீக்கியபிறகு சான்றிதழ் அளிப்பீர்களா? என்றனர், நானும் ஆம் என்றேன். ஆனால் அவர்கள் கடிதத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை. அவர்கள் நேரடியாக ஊடகங்களிடம் சென்றனர். இன்று கடிதத்தை பெற்றுக் கொள்ள வந்தனர்” என்றார்.

தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

சென்சார் வாரியத் தலைவர் நிஹலானிக்கும், படத்தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் இப்போது ஏற்பட்டது அல்ல. கடந்த ஆண்டு அவர் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தன.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘ஸ்பெக்டர்’ படத்தில் வந்த முத்தக்காட்சியின் நீளத்தைக் குறைத்தார், அனுஷ்கா சர்மாவின் என்.எச்.10, மற்றும் அலிகார் போன்ற படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x