Published : 06 Nov 2013 05:54 PM
Last Updated : 06 Nov 2013 05:54 PM
படங்களுக்கு இடையே காட்டப்படும் புகையிலையால் ஏற்படும் தீமைகளுக்கான விளம்பரங்களுக்கு எதிராக ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ரங்கீலா, கம்பெனி, சர்கார், ரத்த சரித்திரா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா.
அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல இந்தி திரையுலக நடிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தற்போது அவரது இயக்கத்தில் விரைவில் 'சத்யா 2' வெளிவரவிருக்கிறது. இன்று தனது ட்விட்டர் தளத்தில், புகையிலையால் ஏற்படும் தீமைகளுக்கான விளம்பரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்.
“மக்கள் கவலைகளை மறக்க 2 மணி நேரம் திரைப்படம் பார்க்க வருகிறார்கள். படத்தின் இடையே காட்டப்படும் புகையிலைக்கு எதிரான விளம்பரத்தில் கோரமான நோயுற்ற நுரையீரல் மற்றும் வாய் பகுதிகளின் வீடியோ காட்சிகளை மக்களுக்கு திணிக்கிறார்கள்.
புகையிலைக்கு எதிரான விளம்பரங்கள் பலவற்றை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். இதைப் பார்த்து ஒருவர் கூட புகைப்பதை நிறுத்தியதாக எனக்குத் தெரியவில்லை.
ரித்திக் ரோஷனையும், கத்ரினாவையும் பார்க்க வரும் புகைப் பழக்கம் இல்லாத ரசிகர்கள் எதற்காக இத்தகைய விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்?” என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.
இவரது கருத்துக்களை ரி-ட்வீட் செய்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.
பிரபல இயக்குநர் வூடி ஆலன் தன் படத்தின் (ப்ளூ ஜாஸ்மின்) இடையே இத்தகைய விளம்பரங்கள் வருவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இந்தியாவில் படத்தினை வெளியிட மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT