Published : 22 Sep 2018 01:18 PM
Last Updated : 22 Sep 2018 01:18 PM
2019-ம் ஆண்டு ஆஸ்கர் தேர்வுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் திரைப்படங்களுக்கு 28 படங்கள் போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரிமா தாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பிறமொழிப் படங்கள் பிரிவுக்குத் தேர்வு செய்வதற்காக மும்பையில் பல்வேறு திரைப்படங்கள் நேற்று திரையிடப்பட்டன. இதில், ராஸி, பத்மாவத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம், பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா, அஜ்ஜி, நாட் உள்ளிட்ட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இதில் முக்கியத் திரைப்படங்களைப் பார்த்த தேசிய திரைப்படக் கூட்டமைப்பு, பரிசீலனை செய்தது. முடிவில், தேசிய விருதுபெற்ற அஸ்ஸாமி மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கிறதா? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அவர்களுக்குச் சென்று சேருகிறதா? அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளை ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர்தான்.
அஸ்ஸாமின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் துனுவிற்கு, தனது கிராமத்தில் ஒரு மியூசிக்கல் பேண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் துனு, மியூசிக்கல் பேண்ட்-ஐ உருவாக்கினாளா? இல்லையா? என்பதே ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படத்தின் கதை.
இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘லகான்’ திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT