Published : 27 May 2019 01:17 PM
Last Updated : 27 May 2019 01:17 PM
நல்லவனாக மட்டுமே நடிக்க முடியாது என்று பெண் பத்திரிகையாளர் எழுப்பிய தொடர் கேள்விகளுக்கு, ஷாகித் கபூர் பதிலளித்துள்ளார்.
தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 'கபிர் சிங்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஷாகித் கபூர், கியாரா அத்வானி, அர்ஜான் பாஜ்வா, நிகிதா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார்.
ஜூன் 21-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ஷாகித் கபூரிடம் படத்தில் நாயகியை நடத்தும் விதம் குறித்து தொடர் கேள்விகளை எழுப்பினார் ஒரு பெண் பத்திரிகையாளர். அதற்கு, அவர் அளித்த பதிலுக்கு வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி, அந்த வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண் பத்திரிகையாளருக்கும், ஷாகித் கபூருக்கும் இடையே நடந்த உரையாடல்:
பத்திரிகையாளர்: ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பெண்ணை நடத்தும் முறை, உணர்வுகளைக் காட்டும் முறை பிரச்சினைக்குரியது. அந்தப் பெண்ணை அடிப்பார். பெண்ணிடம் அதிக ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வார். அதை நீங்கள் கவனித்தீர்களா?
ஷாகித் கபூர்: அந்தப் பெண்ணும் அவரை அறைவார். அதை கவனித்தீர்களா? முதலில் அந்தப் பெண்தான் அறைவார்.
பத்திரிகையாளர்: ரீமேக்கில் அதை தவிர்த்துவிட்டீர்களா?
ஷாகித் கபூர்: ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்?
பத்திரிகையாளர்: சினிமா வளர்ச்சியடைய வேண்டும் இல்லையா?
ஷாகித் கபூர்: சினிமா வளர்ச்சியடைய வேண்டும் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் பார்வையில் சினிமாவின் வளர்ச்சி என்றால் என்ன? எப்போதும் சரியான விஷயங்களை மட்டுமே காட்டுவதா?
நான் 'ஜப் வீ மெட்' என்ற படத்தில் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 'பத்மாவதி' படத்தில் அமைதியான, கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் 'கபிர் சிங்' படத்திலும் நடித்திருக்கிறேன். இதில், ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், அவ்வளவுதான்.
நாம் அனைவரும் கல்லூரியில் படித்திருக்கிறோம். எல்லா கல்லூரியிலும், ‘நான் தான் எல்லாம், இந்த இடம் என்னுடையது’ என்று நினைக்கும் ஒரு இளைஞர் இருப்பார். அப்படி ஆக்ரோஷமில்லாத ஆண்களும் இருப்பார்கள். சில படங்கள் அப்படி இருப்பவர்களைக் காட்டும், சில படங்கள் இப்படி இருப்பவர்களைக் காட்டும். அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன ஆகிறது என்பதை படத்தில் பாருங்களேன்.
’உட்தா பஞ்சாப்’ படத்தில் நான் நடித்த டாமி சிங் கதாபாத்திரம் நினைவில் இருக்கிறதா? என் புரிதலில், கபிர் சிங் கதாபாத்திரத்தைவிட மோசமான விஷயங்களை டாமி சிங் கதாபாத்திரம் செய்யும். நான் என் கதாபாத்திரங்கள் செய்வதை நியாயப்படுத்த ஆரம்பித்தால், என்னால் நடிகனாக இருக்க முடியாது. நான் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். அதை நான் நேர்மையாகத் திரையில் பிரதிபலிக்க வேண்டும்.
நட்சத்திர அந்தஸ்துக்காக எல்லோருக்கும் பிடிக்கும் விஷயங்களை மட்டுமே செய்ய முடியாது. நடிப்பு என்பது நேர்மையாக இருப்பது. மக்களுக்கு நமது கதாபாத்திரம் மீது வெறுப்பு வரலாம். ஆனால், பரவாயில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT