Published : 23 Mar 2019 05:09 PM
Last Updated : 23 Mar 2019 05:09 PM
ட்விட்டர் பக்கத்தில் கரண் ஜோஹர் செயலால் ஏற்பட்ட சர்ச்சையை, தனது ட்வீட்டின் மூலம் ஷாருக்கான் சமரசம் செய்து வைத்துள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநராகத் திகழும் கரண் ஜோஹர், பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். 'தர்மா புரொடக்ஷன்ஸ்' என்ற பெயரில் இவரது படத்தயாரிப்பு நிறுவனம் செயலாற்றி வருகிறது.
இந்நிறுவனத்தின் மூலம் 'கேசரி' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அக்ஷய் குமார், ப்ரீனித்தி சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மார்ச் 21-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த ஆண்டு வெளியான படங்களின் வசூலில் முதல் நாள் வசூல் இப்படத்துக்கு தான் அதிகம் என்ற சாதனையை புரிந்திருந்தாலும், விமர்சன ரீதியாக சோபிக்கவில்லை.
இப்படத்தின் பாராட்டு தொடர்பான ட்வீட்கள் வெளியான போது, அதை கரண் ஜோஹர் தனது ட்விட்டர் கணக்கு மூலம் ரீ-ட்வீட் மற்றும் லைக் செய்து வந்தார். அதில் ஷாருக்கானின் 'ஜீரோ' படத்தை ஒப்பிட்டு ஷாருக்கானை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை கரண் ஜோஹர் லைக் செய்திருந்தார்.
கரண் ஜோஹரின் இச்செயல் ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக #Shameonyoukaranjohar என்று ஹேஷ்டேக் இந்திய அளவில் ஷாருக்கான் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நிகழ்ந்தது, மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கரண் ஜோஹர் விளக்கம் அளித்துவிட்டார். ஆனால், ஷாருக்கான் ரசிகர்கள் தொடர்ச்சியாக அவரைக் கடுமையாக சாடி வருகிறார்கள்.
தற்போது இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் ஷாருக்கான், "கரண் ஜோஹர் எது நல்ல தொழில்நுட்பம் என்பதை அடையாளம் காண முடியாதவர். ஆனால் அவருக்கு உடைகள் தேர்வில் நல்ல ரசனை உள்ளது.
வாழ்க்கை போலத்தான் ட்விட்டரும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல் இரண்டிலும் கிடையாது. அதனால் தவறுகள் இயற்கையானவை. மேலும் அவரது விரல்கள் தடிமனானவை. எனவே, அனைவரும் அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். போர் வேண்டாம், அன்பு புரியுங்கள். அது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் ட்வீட்டால் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT