Last Updated : 05 Feb, 2019 01:26 PM

 

Published : 05 Feb 2019 01:26 PM
Last Updated : 05 Feb 2019 01:26 PM

"ஆஸ்கர் வென்ற பின்னும் அப்பா மாறவில்லை" - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் நெகிழ்ச்சி

தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்று 10 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் குணத்தில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று அவரது மகள் கதிஜா ரஹ்மான் கூறியுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங், மஹாலக்‌ஷ்மி ஐயர், விஜய் பிரகாஷ், நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "உங்கள் இசையை வைத்து, நீங்கள் பெற்ற விருதை வைத்தும் உலகத்துக்கு உங்களைத் தெரியும். ஆனால் உங்கள் மீது மீது அளவுக்கதிகமான அன்பும் மரியாதையும் இருக்கக் காரணம் நீங்கள் எங்களுக்கு கற்பித்த நன்மதிப்புகள் தான். உங்கள் தன்னடக்கம் தான் எங்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது. நீங்கள் ஆஸ்கர் பெற்ற பின்னும் உங்கள் குணத்தில் அணு அளவும் மாற்றமில்லை.


கடந்த 10 வருடங்களில், நீங்கள் எங்களுடன் செலவழிக்கும் நேரம் குறைந்ததை விட வேறெதுவுமே மாறிவிடவில்லை. இப்போது அதற்கு ஈடாக அங்களை சின்ன சின்ன சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பெருந்தன்மை என்னை ஆழமாக ஈர்த்துள்ளது. நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது என் உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்" என்றார்.

தங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுமாறு கதிஜா, ரஹ்மானிடம் கேட்க, ரஹ்மான் மிகவும் உணர்சிக்கரமானார். அவர் பதிலளிக்கையில், "நான் பொதுவாக யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை. நீங்கள் மூவரும் வளரும்போது, எனது அம்மா நான் வளரும் போது எனக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் உங்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதி உறுதி செய்துகொண்டேன்.

இப்போது நீங்கள் உங்கள் மனம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை செய்யும் நேரம். இறைவன் உங்களை வழிநடத்துவார். அவரை வேண்டுங்கள். உங்கள் மனசாட்சிதான் வாழ்க்கையில் உங்களை வழிநடத்த சிறந்த கருவி என நினைக்கிறேன்" என்று கூறினார்.

ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளை வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது. 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x