Published : 20 Dec 2018 12:07 PM
Last Updated : 20 Dec 2018 12:07 PM
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய கதையில் தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சப்பக் என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் என்ற பெண், தனது 15 வயதில், குட்டா, நயீம் கான் உள்ளிட்ட மூன்று நபர்களால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார். அவர்களில் ஒருவரையும் திருமணம் செய்ய முடியாது என லக்ஷ்மி மறுத்ததே இதற்குக் காரணம்.
தொடர்ந்து லக்ஷ்மி தன்னைப் போலவே ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதும் இவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் லக்ஷ்மி தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரது வாழ்க்கையை அடிப்படையாக மேகா குல்சார் இயக்கும் சப்பக் என்ற படத்தில், தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். விக்ராந்த் மாசி என்பவர் உடன் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ராந்த், நிஜ வாழ்க்கையில் ஆசிட் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர், தனிப்பட்ட முறையில் லக்ஷ்மி அகர்வால் பற்றித் தெரிந்தவர்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்தப் படம் எடுப்பது குறித்து லக்ஷ்மி அகர்வாலும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தில் தீபிகா பல்வேறு தோற்றங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் அவற்றுக்கான ஒப்பனை ஒத்திகை நடந்துவருகிறது. முகத்தில் ஆசிட் பாதிப்பைக் கட்ட ப்ராஸ்தடிக் ஒப்பனை பயன்படுத்தப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT