Published : 04 Oct 2018 01:01 PM
Last Updated : 04 Oct 2018 01:01 PM
இந்தியாவில் அநீதிக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இதுதான் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மற்றும் திரை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இருவரும் தனுஸ்ரீ தத்தாவின் புகாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துஹ்ள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார். பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் 2005-ல் 'சாக்லேட்' படப்பிடிப்பின்போது திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரியும் தன்னிடம் தவறான வகையில் நடந்துகொள்ள முயன்றதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்று (வியாழக்கிழமை) நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி இருவரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் அநீதிக்கும், துன்புறுத்தலுக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இதுதான். படேகர் மற்றும் விவேக் குழுக்கள் சமூக வலைதளங்களிலும் மற்ற பொதுவெளிகளிலும் என்னைப் பற்றிய பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி எனக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுக்கிறது.என்னுடைய வீட்டுக்குள் அந்நியர்கள் நுழைய முயற்சிக்கிறார்கள். வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாப்பிடச் சென்றனர். அப்போது யாரென்றே தெரியாத இரண்டு பேர் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். சரியான நேரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். என் உயிருக்கே இங்கு உத்தரவாதம் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT