Last Updated : 12 Nov, 2025 12:04 PM

 

Published : 12 Nov 2025 12:04 PM
Last Updated : 12 Nov 2025 12:04 PM

திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?

மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் பேஸ்டில் கலர் (வெளிர் நிற) புடவைகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என்று வசீகரமாகக் காட்சியளித்த, அவரது க்ளிப்பிங்கள் இணையத்தில் வெளியாகின. அது நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க அதுவே தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

யார் இந்த கிரிஜா ஓக்? ‘வெளிர் நீலம், வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை என அழகிய லினன் காட்டன் புடவையில் அம்சமாக ஜொலிக்கிறார்’, ‘ஒரு தென்னிந்திய நடிகையைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.’, ‘ஸ்லீவெலெஸ் ஜாக்கெட்டுகளில் வசீகரிக்கிறார்.’, என்று விதவிதமான வர்ணனைகளை வாரி வழங்கிய நெட்டிசன்கள், ’யார் இந்த தேவதை?’ என்று இன்ஸ்டாகிராம் தொடங்கி அத்தனை சமூகவலைதளங்களிலும் தேட ஆரம்பித்தனர். அவர் கிரிஜா ஓக், மராத்தி நடிகை என்பதையும் கண்டறிந்து அவரைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

கிரிஜா ஓக், மராத்தி, இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். 2007-ல் இவர் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ மற்றும் 2010-ல் இவர் நடித்த ‘ஷோர் இன் தி சிட்டி’ படங்கள் பிரபலமானவை. 2023-ல் ‘ஜவான்’ படத்தில் ஒர் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

1987 டிசம்பர் 27-ல் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த கிரிஜா ஓக், பிரபல மராத்தி நடிகர் கிரிஷ் ஓக்கின் மகள். இவர் பயோ டெக்னாலஜி படிப்பில் பட்டம் பெற்றிருக்கிறார். நடிப்புத் துறைக்குள் வரும்முன்னர் தியேட்டர் ஒர்ச்ஷாப்களில் பங்கேற்று அனுபவம் பெற்றார். கிரிஜா கடந்த 2011-ம் ஆண்டு ஷுருத் குட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கல்வி, கலை என்று அவர் தேர்ந்தெடுத்த துறைகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தடம் பதித்துவந்த கிரிஜா தற்போது சேலை புகைப்படங்களால் வைரலாகி இருக்கிறார்.

இந்த வைரல் புகைப்படங்களால் கிரிஜா ஓக் தனது மராத்தி திரை பிம்ப அடையாளத்தை தேசிய அளவில் வெளிச்சம் பெற்றுள்ளார் என்று நெட்டிசன்கள் கொண்டாடி, அவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாழ்த்தி வருகின்றனர்.

கிரிஜாவின் ரியாக்‌ஷன்! இது குறித்து கிரிஜா ஓக், “ஞாயிறு மாலை என் போன் சிணுங்கிக் கொண்டே இருந்நது. நான் ஒத்திகையில் இருந்தேன். வந்து பார்த்தால் என் நண்பர்கள் பலரும் எக்ஸ் தளத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? எனக் கேட்டிருந்தனர். ஒருவர் எனது புகைப்படத்தை அனுப்பி அது ப்ரியா பபட்டா என்ற விவாதங்கள் நடப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இன்னும் சில வக்கிரப் பதிவுகளும் கண்ணில் பட்டன. சிலர் என்னை பாலியல் ரீதியாக சித்தரித்திருந்தனர். ஆனால் மராட்டிய ரசிகர்கள் தான், ‘இவரை இப்போதுதான் கண்டுகொண்டீர்களா? எங்களுக்கு இவரை நான்கு ஆண்டுகளாகத் தெரியும்’ என்று சொல்லியிருந்தனர்.

கொஞ்சம் புத்திசாலித்தன தோற்றம், வயதான லுக் இருந்தால் அது ட்ரெண்ட் ஆகும் போல. இதுபோன்ற ட்ரெண்ட்கள் வரும், போகும். ஆனால் நான் செய்யும் பணிகளே இங்கு நிலைத்து நிற்கும். எனது பணிகளை மக்கள் இப்போதாவது அறிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.” என்று சமூகவலைதளத்தில் ரியாக்ட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x