Published : 12 Nov 2025 10:13 AM
Last Updated : 12 Nov 2025 10:13 AM

தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்

தர்மேந்திரா | ஹேமமாலினி

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.

இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. இதற்கிடையே நேற்று காலையில், அவர் காலமானதாக இந்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதை அவருடைய மனைவி ஹேமமாலினி, மகன் சன்னிதியோல் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சிகிச்சையில் குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி சேனல்கள் எப்படி தவறான செய்தியை பரப்ப முடியும்? இது மிகவும் பொறுப்பற்றச் செயல். அவமரியாதையானது. தயவு செய்து குடும்பத்துக்கும் தனிப்பட்ட உரிமைக்கும் மரியாதை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.இதையடுத்து அவருடைய மகளும், நடிகையுமான ஈஷா தியோல், வெளியிட்டுள்ள பதிவில் தர்மேந்திரா குணமடைந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x