Published : 18 Oct 2025 10:20 AM
Last Updated : 18 Oct 2025 10:20 AM
வால்மீகி முனிவரின் வாழ்க்கை கதை படமாக இருப்பதாகவும் வால்மீகியாக பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அதில் அக்ஷய் குமார் வால்மீகி வேடத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதைக் கண்ட அக்ஷய்குமார் அதிர்ச்சியடைந்தார்.
அது செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி வீடியோ என்றும் அதை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் இந்த போலி வீடியோக்களை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அக் ஷய் குமார் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆரிஃப் டாக்டர் தலைமையிலான அமர்வு, ஏ.ஐ-யால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளது.
“ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல். அவை மிகவும் யதார்த்தமாகத் தோன்றுவதால், உண்மையானதையும் போலியையும் வேறுபடுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது. இது தனிப்பட்ட நலன் மட்டுமின்றி பொது நலனுக்கும் எதிரானது. இதுபோன்ற உள்ளடக்கம் சமூகத்தில் தவறான புரிதல்கள், விரோதத்தை உருவாக்கும் என்பதால் அது உடனடியாக பொது தளங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அக்ஷய் குமார் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரேந்திர சரஃப், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் வேகமாக பரவுவது திரைக் கலைஞர்களுக்கு பாதிப்பைப் ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் போலி செய்திகள் மற்றும் சைபர் குற்றங்களின் புதிய முகமாகவும் அது மாறக்கூடும் என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில் கடுமையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடு அவசியம் என்றும் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT