Published : 16 Oct 2025 11:53 AM
Last Updated : 16 Oct 2025 11:53 AM
ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உள்பட பலர் நடித்த வெப் தொடர், ‘த ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடர், வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் 2-வது சீசனும் வெளியானது. அதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணியுடன் சமந்தாவும் நடித்திருந்தார். இந்த சீசனும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் 3-வது சீசன் உருவாகிறது. இதிலும் பிரியாமணி நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த வெப் தொடருக்காக மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியான அனுபவம். படப்பிடிப்பு தொடங்கியதும் எங்களுக்குள் நீண்ட இடைவெளி இருந்ததுபோல நாங்கள் உணரவில்லை. இந்த சீசனில் நாங்கள் எப்படித் தெரிகிறோம் என்பதற்கான ‘லுக் டெஸ்ட்’ நடந்தது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். முதல் நாள் படப்பிடிப்பு ஸ்பெஷலாக இருந்தது. நான், மனோஜ் பாஜ்பாய், எங்கள் குழந்தைகளாக நடித்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டோம்.
அப்போது, 2, 3 மாதங்களுக்கு முன் தான் இந்த தொடரின் 2-வது சீசனை முடித்துவிட்டு வந்த உணர்வு ஏற்பட்டது. பின்னர் அப்போது நடித்ததை பற்றி பேசிக் கொண்டோம். அது இனிமையான அனுபவமாக இருந்தது. வழக்கமாக டேக் போகும் முன் நானும் மனோஜ் பாய்பாயும் முழுவதுமாக ஒத்திகை பார்த்துவிட்டுதான் செல்வோம்.
இந்த தொடர், கதாநாயகனை மட்டுமின்றி அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் பேசியது. இதன் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். முதல் 2 பாகங்களைப் போலவே 3-வது பாகத்தையும் மக்கள் ரசிப்பார்கள். இத்தொடர் சினிமாவாக எடுக்கப்பட்டிருந்தால், வெற்றி பெற்றிருக்குமா? என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT