Published : 14 Sep 2025 07:11 AM
Last Updated : 14 Sep 2025 07:11 AM
பரெய்லி: உ.பி. பரெய்லியில் இந்தி நடிகை திஷா பதானியின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் 2 மர்ம நபர்கள், பதானியின் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. ஆன்மிக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த கும்பல் தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து திஷா பதானியின் தந்தை ஜெகதிஷ் சிங் பதானி கூறும்போது, “எனது மூத்த மகள் குஷ்பு பதானியின் (திஷா பதானி சகோதரி) கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சனாதனிகள். சாதுக்களை நாங்கள் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதிராக சதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என் மகள் எதுவும் அநாகரிகமாக பேசவில்லை. அனிருதா ஆச்சார்யா பெண்கள் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். என் மகள் ஒரு கருத்து தெரிவித்தார். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது’’ என்றார்.
திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்சார்யா பெண்களை வெறுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இந்தக் கருத்து ஆன்மிக தலைவர் பிரேமானந்த் ஜி மகராஜை அவமதிக்கும் வகையில் இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு குஷ்பு உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT