Published : 27 Aug 2025 11:24 AM
Last Updated : 27 Aug 2025 11:24 AM
கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களிலும், கூகுளிலும் அபர்ணா சென் என்ற பெயர் அதிகம் பேசப்பட்ட, தேடப்பட்ட ஒரு பெயராகியிருக்கிறது. அதற்கு காரணம் ‘கூலி’ படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு பேட்டி.
நடிகர் சத்யராஜும், நடிகை ஸ்ருதிஹாசனும் படத்தில் நடித்த அனுபவங்களை ஜாலியாக பகிர்ந்து கொள்ளும் அந்தப் பேட்டியில், கமல்ஹாசனின் பலமொழிப் புலமை குறித்து சத்யராஜ் சிலாகித்துப் பேசினார். 1977-ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஒரு வங்க மொழி படத்தில் நடித்ததையும் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட ஸ்ருதிஹாசன், “அப்பா வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக வங்க மொழியை முழுவதுமாக கற்றார். அதனால்தான் ‘ஹே ராம்’ படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தின் பெயர் அபர்ணா. இப்போது நீங்கள் அதை கனெக்ட் செய்து கொள்ளலாம்” என்றார் ஸ்ருதிஹாசன்.
கமல்ஹாசன் நடித்த அந்தப் படம் ‘கபிதா’. தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் வங்க மொழி ரீமேக்.
யார் இந்த அபர்ணா சென்? - 1945-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர் அபர்ணா. தந்தை சிதானந்த தாஸ்குப்தா ஒரு முன்னணி இயக்குநர். தாய் சுப்ரியா தாஸ்குப்தா 1994-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடை அலங்காரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.
கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்ட அபர்ணா, 1961-ஆம் ஆண்டு சத்யஜித் ரே இயக்கிய ‘டீன் கன்யா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்த அபர்ணா சென், 1981-ல் வெளியான ‘36 சவுரிங்கீ லேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார் அபர்ணா. இந்தப் படம் சிறந்த ஆங்கிலப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றது. 1984-ஆம் ஆண்டு அவர் இரண்டாவதாக இயக்கிய ‘பரோமா’ திரைப்படமும் சிறந்த வங்க மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
2002-ஆம் ஆண்டு அபர்ணா சென் இயக்கிய ‘Mr. and Mrs. ஐயர்’ திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அபர்ணாவின் மகள் கொன்கனா சென் ஒரு தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த ராகுல் போஸ்தான் இப்படத்தின் ஹீரோ.
ஒரு தமிழ் பெண்ணுக்கும், ஒரு முஸ்லிம் ஆணுக்கும் இடையிலான உரையாடலாக இப்படம் செல்லும். வெளியானபோது பெரும் விவாதங்களை கிளப்பிய இப்படம், சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரங்களைப் பெற்றது. சிறந்த இயக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது.
இப்படியாக மொத்தம் 9 தேசிய விருதுகளை வென்றுள்ள அபர்ணா சென், கடந்த ஆண்டு வெளியான ‘தி ரேப்பிஸ்ட்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவுரவம் பெற்றது. இதுதவிர 6 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 13 வங்க மொழி திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அபர்ணா வென்றுள்ளார்.
1986 முதல் 2005-ஆம் ஆண்டு வரை பெண்களுக்கான ‘சனந்தா’ என்ற இதழையும் நடத்தி வந்தார். இது மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்க தேசத்தில் மிக பிரபலமடைந்தது. 1987-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய ’பத்மஸ்ரீ’ விருது அபர்ணாவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாக உயர்ந்துள்ள அபர்ணா சென், இந்திய சினிமாவின் மற்றொரு ஆளுமையான கமல்ஹாசனின் மனம் கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT