Published : 23 Jul 2025 11:46 AM
Last Updated : 23 Jul 2025 11:46 AM
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கண்ணீர் மல்க தனது துயரைப் பதிவு செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்தியாவில் முதன்முதலாக, மீ டூ-வில் (Me Too) பாலியல் புகார் கூறியிருந்தது இவர்தான்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க, குரல் நடுங்க கூறியிருப்பதாவது: 2018-ல் மீ டூ-வில் பாலியல் புகார் கூறியது முதல் இதுவரை நான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறேன். எனது வீட்டிலேயே நான் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன். எனக்கு நடக்கும் துன்புறுத்தல்களை நான் போலீஸாரை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவர்கள் காவல் நிலையம் வந்து முறைப்படி புகார் கொடுக்குமாறு கூறினர்.
நான் நாளை (புதன்கிழமை) சென்று புகார் அளிக்கலாம் என்று இருக்கிறேன். இன்று என் உடல்நிலை சரியில்லை. கடந்த 4, 5 ஆண்டுகளாகவே நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுகிறேன். அது எனது உடல்நிலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது வீட்டில்கூட என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் வீடே அலங்கோலமாகக் கிடக்கிறது.
வீட்டுப் பராமரிப்புக்குத் தேவையான வேலையாட்களைக் கூட என்னால் பணியமர்த்த முடியவில்லை. ஏனென்றால் ‘அவர்களாகவே’ எனது வீட்டில் வேலையாட்களை பணியமர்த்தியுள்ளனர். அவர்கள் அனுப்பிய ஆட்கள் என் வீட்டில் பொருட்களைத் திருடிச் செல்கின்றனர். எனது வேலைகளை நானே செய்ய வேண்டியுள்ளது. என் சொந்த வீட்டிலேயே எனக்கு நேரும் துன்புறுத்தலில் இருந்து தயவுசெய்து என்னை யாரேனும் காப்பாற்றுங்கள்.” என்று கூறியுள்ளார்.
தனுஸ்ரீ அந்த வீடியோவில் எனது சொந்த வீட்டில் ‘அவர்கள்’ துன்புறுத்துகின்றனர் என்று வரிக்கு வரி சொன்னாலு, யார் அந்த நபர்கள் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை.
இன்னொரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், பின்னணியில் சில சத்தங்கள் கேட்கின்றன. அதை சுட்டிக்காட்டிய பேசிய தனுஸ்ரீ, “என் வீட்டில் அன்றாடம் இப்படியான சத்தங்கள் கேட்கின்றன. மேல்தளத்திலிருந்து, வாயில் கதவுப் பக்கம் இருந்து இந்த சத்தங்கள் வருகின்றன. நேரங்காலம் இல்லாமல் இவ்வாறாக நடக்கிறது. நான் குடியிருக்கும் வளாக நிர்வாகத்தினருக்கும் இது குறித்து நான் புகாரளித்தேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இது போன்ற தொடர் துன்புறுத்தல்களால் நான் மிகவும் சோர்வடைந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT