Published : 14 Jul 2025 10:29 AM
Last Updated : 14 Jul 2025 10:29 AM

‘அங்கமாலி டைரிஸ்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் மதுமிதா!

காலிதர் லாபதா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் இயக்குநர் மதுமிதா

தமிழில், வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை, கேடி என்கிற கருப்பு துரை ஆகிய படங்களை இயக்கியவர் மதுமிதா. இவர் அபிஷேக் பச்சன் நடிப்பில் ‘காலிதர் லாபதா’ என்ற பெயரில் கேடி என்கிற கருப்புதுரை படத்தை, இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படம் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது.

இதுபற்றி மதுமிதாவிடம் பேசிய போது, “தமிழில் நான் இயக்கிய கேடி என்கிற கருப்புதுரை படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. உறவுகளால் உதறப்பட்ட முதியவர் ஒருவருக்கும் வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்குமான வாழ்க்கையை பேசிய படம் அது. இந்திக்காக வயதானவரை, 50 வயதுள்ளவராக மாற்றினோம்.

தமிழில் தலைக்கூத்தல் விஷயத்தை வைத்திருந்தோம். அவர்களின் கலாச்சாரப்படி வயதானவர்களைக் கும்பமேளா, அல்லது காசியில் தொலைத்துவிட்டு வந்து விடுவதாகச் சொன்னார்கள். அதனால் மாற்றங்களுடன் இயக்கினேன்.

அபிஷேக் பச்சனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அடுத்து மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தை இந்தியில் இயக்கி இருக்கிறேன். அந்த கதையிலும் மாற்றம் செய்திருக்கிறோம். இந்தப் படம் மூலம் அர்ஜுன் தாஸ் இந்தியில் அறிமுகமாகிறார். கோவா பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்து ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்ப் படத்தை இயக்க இருக்கிறேன். த்ரில்லர் கதையான இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x