Published : 28 Jun 2025 09:56 AM
Last Updated : 28 Jun 2025 09:56 AM
மும்பை: இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவர் மும்பையில் நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷெஃபாலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது கணவரும், நடிகருமான பராக் த்யாகி, அவரை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக ஷெஃபாலியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. வேறொரு மருத்துவமனையில் இருந்து அவரது கொண்டுவரப்பட்ட காரணத்தால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர்தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பை - அந்தேரி பகுதியில் உள்ள ஷெஃபாலியின் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள மும்பை போலீஸார் நள்ளிரவு சென்றனர். அங்கு தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். ஷெஃபாலியின் மரணத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதை சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஷெஃபாலியின் உடலை வீட்டில் இருந்து கைப்பற்றி போலீஸார் தான் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல் துறை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2002-ம் ஆண்டு இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ மூலம் ஷெஃபாலி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், 42 வயதான அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT