Published : 24 Apr 2025 08:35 AM
Last Updated : 24 Apr 2025 08:35 AM
புதுடெல்லி: கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட் சினிமா நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “பஹல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. காஷ்மீரில் காஷ்மீர் வாழ் இந்துக்கள் மீது இது மாதிரியான தாக்குதலை என் வாழ்நாள் முழுவதும் நான் பார்த்துள்ளேன். அதோடு ஒப்பிடும்போது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் கதை வெறும் முன்னோட்டம் தான்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஷ்மீரில் தங்கள் விடுமுறையைக் செலவிட வரும் மக்களின் மத ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் மீதான தாக்குதல் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
உயிரிழந்த கணவரின் சடலத்துக்கு அருகே இளம்பெண் ஒருவர் இருக்கின்ற படமும், தன்னையும் கொன்று விடுமாறு பயங்கரவாதிகளிடம் வேண்டுகோள் வைத்த பல்லவியின் பேட்டியும் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்த அரசிடம் நான் கை கோப்பி கேட்பது ஒன்றே ஒன்றுதான். பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அதன் மூலம் ஏழேழு ஜென்மத்துக்கும் இது மாதிரியான செயல்களை செய்யக்கூடாது. அவர்களுக்கு கருணை காட்ட கூடாது” என அனுபம் கெர் கூறியுள்ளார். அவர் காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT