Last Updated : 19 Jan, 2025 02:00 PM

2  

Published : 19 Jan 2025 02:00 PM
Last Updated : 19 Jan 2025 02:00 PM

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ வசூல் நிலவரம் என்ன?

கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் முதல் நாள் திரையரங்க வசூல் குறைவாக இருந்தாலும், மறுநாளில் கூடுதல் வசூல் ஈட்டி சற்றே பிக்-அப் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகையும், மக்களவை எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. கடந்த 1975-1977 இடையிலான 21 மாதங்களில் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையை இந்தியாவின் இருண்ட காலம் என எதிர்க்கட்சிகள் இன்றளவும் விமர்சித்து வருகின்றன.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு, சென்சார் பிரச்சினை என இத்திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்குப் பின் ஜனவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியான முதல் நாளன்று இந்திய அளவில் ரூ.2.5 கோடி வசூலை ஈட்டியது. அதேவேளையில், இரண்டாவது நாளில் சற்றே பிக்-அப் ஆக ஆரம்பித்து கிட்டத்தட்ட ரூ.4 கோடி அளவில் வசூலை ஈட்டியுள்ளதாக வர்த்தகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, முதல் இரு தினங்களில் ரூ.6 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

கலவையான விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும், முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாளில் வசூல் கூடியதால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு என திரை வர்த்தகர்கள் கணித்துள்ளனர். பாலிவுட்டில் சமீப காலமாக ஹிட் கொடுக்காமல் திணறிவந்த கங்கனாவுக்கு கைகொடுக்கும் படமாக ‘எமர்ஜென்சி’ அமையும் எனவும் படக்குழு நம்புகிறது.

இதனிடையே இந்திரா காந்தி குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்ட கருத்துகள்: இந்தப் படத்துக்காக இந்திரா காந்தி பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது, நான் அறிந்த விஷயங்கள் முற்றிலும் முரண்பாடாக இருந்தன. பலவீனமாக இருந்தால், அதிக கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என விரும்புவோம் என்ற எனது நம்பிக்கைக்கு இது வலு சேர்த்தது.

இந்திரா காந்தி மிகவும் சக்திவாய்ந்த பிரதமர் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் பலவீனமாக இருந்தார். அவர் தன்னை பற்றியே உறுதிசெய்ய முடியாதவராக இருந்தார். இந்திரா காந்தி பலரைச் சார்ந்திருந்தார். அவர்களில் ஒருவர் சஞ்சய் காந்தி. எமர்ஜென்சி படத்துக்கு முன்பாக இந்திரா காந்தி மீது எனக்கு அவ்வளவு அனுதாபம் இல்லை.

எமர்ஜென்சி திரைப்படம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக நான் பல சவால்கள், பின்னடைவுகள் மற்றும் அழுத்தங்களை சந்தித்தேன். அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களுக்கு நாங்கள் ஆதாரங்களை தாக்கல் செய்தோம். அந்தப் படத்தில் எதிர்ப்பு தெரிவிக்க எதுவும் இல்லை.

இந்தப் படம் கடந்தாண்டு செப்டம்பர் 26-ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் திரைப்பட வாரியத்தின் சான்று கிடைக்காததால் வெளியிட முடியவில்லை. பலர் இந்தப் படம் வெளியாவதை தடுக்க முயன்றனர். இதனால் நான் முற்றிலும் நொறுங்கி போனேன். எமர்ஜென்சி திரைப்படம் வழக்கத்துக்கு மாறான, சர்ச்சைக்குரிய திரைப்படம்தான். ஆனால், இந்தப் படம் வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதி பற்றி பேசுகிறது.

இந்திரா காந்தி அனைவராலும் விரும்பப்படும் தலைவர். ‘எமர்ஜென்சி’யில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் இந்திரா காந்தி அனைவராலும் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர். ஒரு பெண்ணாக மூன்று முறை பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தியுள்ளார். இது, சாதாரண விஷயம் அல்ல.” என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x