Published : 21 Nov 2024 07:57 PM
Last Updated : 21 Nov 2024 07:57 PM
உத்தரபிரதேசம்: விக்ராந்த் மாஸ்ஸி நடித்துள்ள ‘ தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் வரி விலக்கு அளித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மத்தியப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படத்தை தீரஜ் சர்ணா இயக்கியுள்ளார். விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் படத்தை பார்த்தனர். இதில் படக்குழுவும் கலந்துகொண்டனர். படத்தை பார்த்த பின் முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்துக்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விக்ராந்த் மாஸ்ஸி உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் சிரத்தை எடுத்து முக்கியமான படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
சமூகத்தில் பகைமையை உருவாக்க செய்த நிகழ்வின் உண்மையை அறிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை உள்ளது. அதனால் இந்தப் படம் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் படத்துக்கு மாநில அரசு சார்பில் வரி விலக்கு அளிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, இந்தப் படத்தை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் சமீபத்திய வரலாற்றின் மிகவும் அவமானகரமான நிகழ்வின் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ள சிறந்த படம்” என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT