Published : 30 Sep 2024 02:55 PM
Last Updated : 30 Sep 2024 02:55 PM
புது டெல்லி: பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டு ‘மிரிகயா’ இந்திப் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் மிதுன் சக்கரவர்த்தி. வங்காளம், பஞ்சாபி, ஒடியா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
1990-ல் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘அக்னிபாத்’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பாராட்டப்பட்டது. திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலில் பங்களித்துள்ளார் மிதுன். கடந்த 2014-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2021-ல் அவர் பாஜகவில் இணைந்தார். பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் 2009 முதல் 2018 வரை நடுவராக இருந்தார். முன்னதாக அவருக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரின் திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிதுன் சக்கரவர்த்தியின் திரையுலக பயணம் அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகமாக அமையும். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் 70-வது தேசிய விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மிதுன் சக்கரவர்த்திக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மிதுன் சக்கரவர்த்தி இந்திய சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையில்லாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நடிப்புக்காக தலைமுறை தாண்டியும் போற்றப்படுவார். அவருக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT