Published : 28 Aug 2014 03:08 PM
Last Updated : 28 Aug 2014 03:08 PM
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், இன்டர் போலின் (சர்வதேச காவல் துறை) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், நடிகர் ஜாக்கி சான் உடன் சக தூதராக ஷாரூக் சேர்ந்துள்ளார்.
இன்டர்போலின் 'டர்ன் பேக் கிரைம்' (Turn Back Crime) என்ற விழிப்புணர்வு பிரச்சாத்திற்கு ஷாரூக் தூதாரகியுள்ளார். குற்றங்களைத் தடுப்பதில் எப்படி ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் பிரச்சாரமே இது.
ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஷாரூக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பேசிய ஷாரூக், "இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.
மேலும், " எத்தகைய குற்றமாக இருந்தாலும், மனிதர்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்களை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும்" என ஷாரூக் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சாரத்திற்கு தூதராக ஷாரூக் நியமிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிய இன்டர்போலின் தலைவர் ரொனால்ட் கே நோபல், "ஷாரூக்குடன் இணைந்திருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். மக்களை சினிமா மூலம் மகிழ்வித்துவரும் ஷாரூக், எப்படி தனது கலைத் திறனை இந்த பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறோம்" என்றார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, ஏற்கெனவே, சர்வதேச விளையாட்டு வீரர்களான லயனல் மெஸ்ஸி, ஃபெர்னாண்டோ அலொன்ஸோ, கிமி ரெக்கனன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT