Published : 18 Jul 2024 04:41 PM
Last Updated : 18 Jul 2024 04:41 PM
மும்பை: “தென்னிந்திய திரைப்படங்களில் அதிகமான ஊதியம் கொடுப்பதால் நடிக்கிறேன். இருப்பினும் நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மை புரியாததால் குற்ற உணர்வு ஏற்படும். நாம் ஏமாற்றுகிறோமா? என்றும் எண்ணியதுண்டு” என பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பதற்கு முக்கியமான காரணம் அவர்கள் அதிக சம்பளத்தை கொடுக்கிறார்கள். பாலிவுட்டில் ‘ராமன் ராகவ்’ போன்ற ஒரு படத்தில் நான் நடிக்கும்போது, என் உணர்வுகள், என்னுடைய எண்ணங்கள், ஆன்மா அனைத்தும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், தென்னிந்திய படங்களில் நடிக்கும்போது என்னுடைய கதாபாத்திரத்துக்கான முழுமையான கட்டுப்பாடு என்னிடம் இருக்காது.
யாராவது ஒருவர் படப்பிடிப்புக்கு முன் அந்த கதாபாத்திரம் குறித்து எனக்கு விளக்க வேண்டியிருக்கும். ஆனாலும் நல்ல சம்பளம் கிடைப்பதால் தென்னிந்தியப் படங்களில் நடிக்கிறேன். இருப்பினும் என் மனத்துக்குள் ஒரு குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இவ்வளவு பணம் தருகிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
இதற்கு சரியான வார்த்தை ‘சீட்டிங்’ (cheating) என்று நினைக்கிறேன். படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அது தெரியாது. ஆனால் என்னால் அதனை உணர முடியும். இது ஒரு விளம்பரத்தை போல எனக்குத் தோன்றும். சம்பந்தப்பட்ட பொருளுக்கான எந்த எமோஷனலும் என்னிடம் இருக்காது. இதில் அவர்கள் செலுத்தும் ஊதியத்தை மட்டுமே நான் கணக்கில் கொள்கிறேன்” என்றார்.
இதற்கு முன்பு அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில், ‘பேட்ட’ திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. அழுத்தமான நடிப்பு வெளிப்பட்ட போதிலும், வெட்கமாக உணர்ந்தேன். எனக்கு அவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இருப்பினும் நான் ஏமாற்றுகிறேனோ? என்ற எண்ணம் எனக்குள் தோன்றும்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT