Published : 13 Jun 2024 08:12 PM
Last Updated : 13 Jun 2024 08:12 PM

சனாதன சர்ச்சை: ஆமீர்கான் மகனின் ‘மஹாராஜ்’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மும்பை: ஆமீர்கானின் ‘மஹாராஜ்’ (Maharaj) பாலிவுட் படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், ‘Ban Maharaj Film’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் - ரீனா தத்தாவின் மகன் ஜூனைத் கான். இவர் ‘மஹாராஜ்’ என்ற பாலிவுட் படம் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெள்ளிக்கிழமை நேரடியாக வெளியிடப்பட உள்ளது.

சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். வழக்கமான படங்கள் போல அல்லாமல், எந்த டீசரும், ட்ரெய்லரும் பெரிய அளவில் புரமொஷனும் இல்லாமல் படக்குழு இப்படத்தை வெளியிடுகிறது. ஒரே ஒரு போஸ்டர் வெளியானது. அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் 1862-ல் நடந்த மஹாராஜ் அவதூறு வழக்கைப் பற்றி பேசுகிறது. மஹாராஜாக்கள் குறித்த தவறான பிம்பத்தை இப்படம் உருவாக்கும் என்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரம் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘Boycott Netflix’, ‘Ban Maharaj Film’ என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி, “சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. மஹாராஜ் படத்தை தடை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆமீர்கான் நடிப்பில் வெளியான ‘லால் சிங் சத்தா’ படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது.

அது என்ன மஹாராஜ் அவதூறு வழக்கு? - படம் கர்சந்தாஸ் முல்ஜி என்பவரை மையமாக வைத்து நகர்கிறது. இந்த கதாபாத்திரத்தில் தான் ஆமீர்கானின் மகன் ஜூனைத் கான் நடித்துள்ளார். கர்சந்தாஸ் முல்ஜியை பொறுத்தவரை இவர் ஒரு பத்திரிகையாளர், வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடையாளப்படுத்தி வந்தார். மும்பையைச் சேர்ந்த இவர் தாதாபாய் நவுரோஜியின் ஆதரவாளர். கர்சந்தாஸ் முல்ஜி விதவை மறுமணம் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பது உள்ளிட்ட சீர்திருந்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்தச் சூழலில் 1861-ம் ஆண்டு கர்சந்தாஸ் ‘சத்யபிரகாஷ்’ (Satyaprakash) என்ற தனது வார இதழில் வெளியிட்ட தொடர் கட்டுரைகள் அன்றைக்கு சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த கட்டுரைகள் மஹாராஜாக்கள் மத சடங்குகள் என்ற போர்வையில் பெண் பக்தர்களுடன் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதை பேசியது.

இது தொடர்பான பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆகவே இப்படம் இந்த வழக்கையும் அதன் பின்னணியையும் பேசுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x