Published : 26 Feb 2024 08:57 PM
Last Updated : 26 Feb 2024 08:57 PM
மும்பை: கஜல் உலகின் புகழ்பெற்ற பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.
குஜராத்தில் பிறந்த பங்கஜ் உதாஸ், ராஜ்கோட்டில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் தபேலா பயிற்சி பெற்றார். குஜராத்தில் இருந்து பங்கஜ் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அப்போது தன் தம்பியுடன் சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கினார் பங்கஜ் உதாஸ். தொடர்ச்சியாக பாலிவுட் திரையுலகில் தடம்பதித்த பங்கஜ் உதாஸ், நூற்றுக்கணக்கான திரைப் பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வரை அவர் திரையிசை மற்றும் கஜல் கச்சேரிகளை அரங்கேற்றி வந்தார்.
கஜல் உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்பட்ட இவர், 1980-ல் வெளியான ‘ஆஹத்’ (Aahat) ஆல்பம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு வரை அவர் 50 ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். ‘நாம்’ (NAAM) இந்திப் படத்தில் வெளியான ‘சிட்டி ஆயி ஹை’ (Chitti Aayi Hai) பாடல் மிகவும் பிரபமானது. ‘காயல்’, ‘மொஹ்ரா’ படத்தில் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
‘ஜீயே தோ ஜீயே கைசே’, ‘சுப்கே சுப்கே’, ‘கஜ்ரே கி தரில்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பத்மஸ்ரீ மட்டுமல்லாது தனது 40 ஆண்டுகளுக்கும் மேலான இசை பயணத்தில் மேலும் பல மதிப்புமிக்க விருதுகளையும் வென்றுள்ளார் உதாஸ். கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உதாஸ், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (பிப்.26) காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT