Published : 21 Nov 2017 05:04 PM
Last Updated : 21 Nov 2017 05:04 PM
ஃபத்வா பெற்றதால் நானும் பிரபல இரானிய இயக்குநர் மஜித் மஜிதியும் மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானும், மஜித் மஜிதியும் இணைந்து, 2015ல் 'முஹம்மது: தி மெஸெஞ்சர் ஆஃப் காட்' படத்தில் பணிபுரிந்தார்கள். நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம் இது. இந்தப் படத்தில் பணிபுரிந்ததற்காக ரஹ்மானுக்கும், மஜிதிக்கும் இஸ்லாமிய அமைப்பொன்று ஃபத்வா விதித்தது.
தற்போது இருவரும் மீண்டும் இணைந்து 'பியாண்ட் தி க்ளவுட்ஸ்' (Beyond the Clouds) என்ற படத்தில் பணியாற்றியுள்ளனர். கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழா படமாக இது திரையிடப்பட்டது. இந்த விழாவில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "இங்கு இருப்பதை சிறப்பாக உணர்கிறேன். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இரானிய இயக்குநருடன் சேர்ந்து பணியாற்றிவிட்டு இங்கு நின்று பேசுவது, அற்புதமாகவும், அதே சமயம் விநோதமாகவும் இருக்கிறது. அவர் ஓர் அற்புதமான மனிதர். தைரியமானவரும் கூட.
எங்கள் இருவருக்கும் ஃபத்வா விதிக்கப்பட்டது. அதனால் நாங்கள் மேல் தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். படத்தில் பணியாற்றிய இஷான், மாளவிகா உள்ளிட்டோருக்கு என் வாழ்த்துகள். படத்துக்கு இந்தி வசனம் எழுதிய விஷால் பரத்வாஜ் அவர்களுடன் பணியாற்றியது பெரிய கவுரவம்" என்று கூறினார்.
'பியாண்ட் தி க்ளவுட்ஸ்' தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT