Published : 02 Nov 2017 01:31 PM
Last Updated : 02 Nov 2017 01:31 PM
சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தை தடை செய்ய வேண்டும் என மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெய்குமார் ராவல் கோரியுள்ளார். இது குறித்து மாநில அரசு, தணிக்கைத் துறைக்கு கடிதம் எழுதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ராவல் "வரலாறும், வரலாற்று குறிப்புகளும் இந்தப் படத்தில் திரித்து சொல்லப்பட்டுள்ளன. பொறுப்புத் துறப்பு அறிவிப்பு மட்டும் போடுவது ஒருவரைக் காப்பாற்றவே.
படத்தில் உண்மை எப்படி திரிக்கப்பட்டுள்ளது என்றும், அதுவே சரியான வரலாறு என்பதைப் போல கூறப்பட்டுள்ளதைப் பற்றியும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸிடம் தெரிவித்துள்ளேன். வரலாற்றில் நாம் கற்பனை சுதந்திரம் எடுத்துக்கொள்ள முடியாது. படம் கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டும். ராஜ்புத் இனத்தவர்களும் தடை கோரியுள்ளனர். அதை மத்திய அரசுக்கு எடுத்துச் செல்ல யோசித்துள்ளோம்.
ராணி பத்மாவதி மற்றும் 16,000 அரச குல பெண்களும், அலாவுதின் கில்ஜியின் கைகளில் சிக்காமல் இருக்க தீக்குளித்தார்கள். இது நமக்கு மிகப் பெரிய பெருமை. இன்றுவரை ராணி பத்மாவதியின் துணிவைப் பற்றி எங்கள் பெண்களுக்கு சொல்லித் தருகிறோம். நாங்கள் ராணி பத்மாவதியின் கணவர் ராவல் ரத்தன் சிங் மற்றும் பப்பா ராவல் ஆகியோரின் நேரடி சந்ததி.
மகாராஷ்டிரத்தில் ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த பலர் வாழ்ந்து வருகின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி படம் எடுக்க பல கதைகள் உள்ளன. ரன்வீர் சிங் போன்ற ஒரு நடிகர், எப்படி அலாவுதின் கில்ஜி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அதிசயமாக இருக்கிறது. படத்தில் காட்டுவது போல் ராணி பத்மாவதி நடனமே ஆடியதில்லை. அப்பறம் எப்படி பொதுவில் ஆடியிருப்பார்?" என்று கூறியுள்ளார்.
ராஜ்புத் இனத்தவர்களின் கோரிக்கையை முதல்வருக்கு எடுத்துச் சென்றுள்ள ராவல், படத்தை தடை செய்யக் கோரி, தணிக்கைத் துறைக்கு மாநில அரசு எழுதும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள 'பத்மாவதி', டிசம்பர் 1-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT