Published : 06 Nov 2017 04:38 PM
Last Updated : 06 Nov 2017 04:38 PM
தனது சம்பளம் பற்றி பேசுவதில் பெரிய ஆர்வம் இல்லை என்று நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
தீபிகா நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், 'பத்மாவதி' திரைப்படம் திரைக்கு வரத் தயாராகியுள்ளது. இந்தப் படம் 3டி வடிவிலும் வெளியாகிறது. இதில் நடித்துள்ள ஷாகித் கபூர், ரண்வீர் சிங் சம்பளத்தை விட தீபிகாவுக்கு அதிக சம்பளம் தரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி கேட்டபோது, "எனது சம்பளம் பற்றி பேசுவதில் பெரிய ஆர்வம் இல்லை. எனக்கு தரப்பட்டுள்ள சம்பளம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. அதே நேரம் தயாரிப்பாளர்கள் இவ்வளவு பணத்தை ஒரு படத்தில் முதலீடு செய்வதில் எனக்குப் பெருமையாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. பிரமாண்ட ரீதியில் மட்டுமல்ல பட்ஜெட் மற்றும் வேலை செய்த நபர்கள் என்ற வகையிலும் இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவில் இந்தப் படம் இருக்கும். அந்த வகையில் இது இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இருக்கும் என்பது என் எண்ணம்" என்று தீபிகா பதிலளித்தார்.
மேலும் இந்தப் படத்தில் அவரது தோற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "பெண்களுக்கு இதுதான் அழகு என்று ஒன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. பத்மாவதியில் எனது தோற்றம் குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அப்படி ஒரு தோற்றத்தைத் தர, எனக்கும் என் இயக்குநருக்கும் அளவு கடந்த நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் இல்லையா.
பத்மினி கதாபாத்திரத்தின் அழகு, உடலழகைத் தாண்டியது. அவளது ஆன்மாவும், அவளது மக்கள் அவளைப் எப்படிப் பார்த்தார்கள் என்பதும் தான் அழகு. அவள் இன்று ஆராதிக்கப்படுகிறாள். ராணி பத்மினியின் போர்க்களம் என்பது வேறு. அவள் வலிமையும், ஆற்றலும் வேறு. அவள் களத்துக்குச் செல்லவில்லை. அவள் கையில் வாளோ கேடயமோ இருக்காது. ஆனால் போராடும் குணம் என்பது பொதுவானதுதான். அவளது தூய்மை, தீவிரம், நம்பிக்கை ஆகியவற்றை நம்மால் எளிதல் அடையாளம் கண்டு தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.
பாஜிராவ் மஸ்தானி படத்தில் என்னை போர் செய்யும் இளவரசியாகக் காட்டிக்கொள்ள, கையில் வாளேந்தி, குதிரை சவாரி செய்திருப்பேன். ஆனால் களத்தைத் தாண்டி நடக்கும் போர்களை எப்படி எதிர்கொள்வது? பாரம்பரியத்துக்காக, கலாச்சாரத்துக்காக, அன்புக்காக போராடும்போது, அதிலும் ஆயுதங்கள் இன்றி உணர்ச்சிகள் மூலமாக மட்டும் எப்படி அதைக் காட்டுவது? அதுதான் இந்தப் படத்தில் எனக்கு சவாலாக இருந்தது" என்று தீபிகா கூறியுள்ளார்.
படத்தைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள் பற்றி கேட்டபோது, யாராலும் படத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று தீபிகா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT