Last Updated : 14 Nov, 2017 02:20 PM

 

Published : 14 Nov 2017 02:20 PM
Last Updated : 14 Nov 2017 02:20 PM

கோவா படவிழாவுக்கு தேர்வு செய்த படங்களை நீக்கிய அமைச்சகம்: நடுவர் குழுவிலிருந்து சுஜய் கோஷ் ராஜினாமா

48வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் குழு தேர்ந்தெடுத்த படங்களை இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கிய காரணத்தால், குழுவின் தலைவர் இயக்குநர் சுஜய் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோராமா பிரிவுக்கான திரைப்படத் தேர்வுகளை அஜய் கோஷ் தலைமையில், நிஷிகாந்த் கமத், நிகில் அத்வானி, அபூர்வா அஸ்ரானி, ருச்சி நரைன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு தேர்வு செய்கிறது. இதில் 'செக்ஸி துர்கா' (Sexy Durga) மற்றும் 'நியூட் ' (Nude) ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த இரண்டு படங்களையும் இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் வருத்தமடைந்த நடுவர் குழுவின் தலைவர் சுஜய் கோஷ் ('கஹானி' படத்தின் இயக்குநர்) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை உறுதி செய்தாலும் அது குறித்து மேலும் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு குழு உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'செக்ஸி துர்கா', 'எஸ்.துர்கா' என்ற பெயரில் வெளியாகவுள்ள மலையாளத் திரைப்படம். 'நியூட்', தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மராத்தி திரைப்படம்.

முன்னதாக  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், செக்ஸி துர்கா படத்தினை மும்பை திரைப்பட விழாவில் திரையிட அனுமதி மறுத்திருந்தது. சட்டத்தை பாதிப்பதோடு மத உணர்வுகளையும் புண்படுத்துவதால் அனுமதி மறுக்கபட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேசிய சனல் குமார், "நமது தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் குறித்து யோசிக்கிறேன். கலைஞர்களுக்கான அனைத்து வெளிகளையும் இந்த அரசாங்கம் சர்வாதிகார முறையில் கைப்பற்றுகிறது. கலை ரீதியான சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் அபத்தமான காரணங்களுக்காக அழித்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருகிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரவி ஜாதவ் இந்த செய்தி பற்றி அறிந்ததும் அதிர்ச்சியுற்றதாகக் கூறியுள்ளார். "'நியூட்' (நிர்வாணம்) என்ற தலைப்பை வைத்து முடிவு செய்யாதீர்கள்" என்று அவர் கூறியுள்ளார். இந்தப் படம், ஓவியங்களுக்காக நிர்வாணமாக நிற்கும் ஒரு மாடலைப் பற்றிய கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x