Published : 25 Oct 2017 04:56 PM
Last Updated : 25 Oct 2017 04:56 PM
ஹாலிவுட்டில் ஹார்வீ வீன்ஸ்டீன் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், நடிகர் இர்ஃபான் கான் பாலிவுட்டிலும் அதே நிலைமை தான் என்று கூறியுள்ளார்.
வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வீன்ஸ்டீன் மீது புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் இர்ஃபான் கான் தனது சொந்த வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்களை ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
"நான் அது போன்ற சூழல்களில் பல முறை இருந்துள்ளேன். இப்போது யார் என்றெல்லாம் பெயர்கள் சொன்னால் நன்றாக இருக்காது. சற்று சமரசம் செய்து கொண்டால் வாய்ப்பு கிடைக்கும் என வெளிப்படையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இப்போது என்னிடம் யாரும் அப்படிப் பேசுவதில்லை.
அது போன்ற அழைப்புகள், ஆண் பெண் என இருதரப்பிடமிருந்தும் வந்திருக்கின்றன. சற்று விநோதமாக இருக்கும். ஏனென்றால் நமக்கு நன்றாகத் தெரிந்து, நாம் மிகவும் மதிக்கும் ஒருவர் அப்படிப் பேசும்போது அதுநாள் வரை இருந்த உறவு முறையே மாறிப் போகும். அதுதான் சோகமான விஷயம். ஆனால் அழைப்புகளை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் வலிமை எனக்கு உள்ளது.
என்னுடன் உறங்கினால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என ஒருவர் உங்களை அணுகலாம். ஆனால் அதை நிராகரிக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது. அத்தகைய சூழல் ஆண், பெண் என இருவருக்கும் வருகிறது. ஆனால் பெண்களுக்கு அதிகமாக வருகிறது. அதுவும் பரஸ்பர விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி நடப்பதெல்லாம் வருத்தமளிக்கிறது.
இதை ஒருவர் மீண்டும் மீண்டும் செய்கிறார் என்றால் அவரை வெளியுலகுக்கு காட்ட வேண்டும். அவரைப் பற்றி பேசுவது அவசியம். ஒருவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வது என்பதே நோய்தான். அது நமது சமூகத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது. சமூகம் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒருவரை பயன்படுத்தி சுரண்டுவதை விட ஒடுக்குமுறை தான் முக்கியமான காரணியாக இருக்கிறது. மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பழக அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கமோ, வெறொரு அமைப்போ இதில் முடிவெடுக்கக் கூடாது" இவ்வாறு இர்ஃபான் கான் பேசியுள்ளார்.
ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆஃப் பை உள்ளிட்ட ஹாலிவு படங்களிலும் இர்ஃபான் கான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT