Published : 08 Jun 2023 12:19 PM
Last Updated : 08 Jun 2023 12:19 PM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோனை கட்டியணைத்து முத்தமிட்ட ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. ஆந்திர மாநில பாஜக தலைவர் ரமேஷ் நாயுடுவும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் கடந்த ஜூன் 6 பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு நடந்த மறுநாள் காலை படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் நடிகை கீர்த்தி சனோன் கோயிலில் இருந்து கிளம்ப தயாரானபோது அவரை வழியனுப்பும் விதமாக இயக்குநர் ஓம் ராவத் அவரை கட்டியணைத்து முத்தமிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் ஓம் ராவத்தின் இந்த செயலை கடுமையான விமர்சித்தனர்.
இது குறித்து ஆந்திர மாநில பாஜக தலைவர் ரமேஷ் நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களது முட்டாள்தனங்களை புனிதமான ஒரு இடத்துக்குள் கொண்டு வருவது அவசியமா? திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்கு முன்னாள் கட்டிப்பிடிப்பது, முத்தமிட்டுக் கொள்வது போன்ற அன்பை வெளிப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது, மரியாதைக் குறைவானது மற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாதது” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் இந்தப் பதிவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். எனினும் அவரது ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT