Published : 30 Sep 2025 10:18 AM
Last Updated : 30 Sep 2025 10:18 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வு - இன்ப அதிர்ச்சி தந்த எளிய வினாக்கள்!

எப்​போதும் போல டிஎன்​பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்​வு, எந்த சச்​சர​வும் இன்றி சிறப்​பாக நடந்து முடிந்​துள்​ளது. போட்​டித் தேர்​வு​களைத் திறம்பட நேர்த்​தி​யாக நடத்​து​வ​தில் தனக்​குள்ள நிபுணத்​து​வத்​தைத் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணையம்​ (டிஎன்​பிஎஸ்​சி) மீண்​டும் ஒரு​முறை ஐயத்​துக்கு இடமின்றி நிரூபித்து இருக்​கிறது. வாழ்த்​துக்​கள்.

பொதுத்​தமிழ் (அ) பொது ஆங்​கிலம்; மற்​றும் பொது அறிவு / திறனறிவு என்று இரண்டு பகு​தி​கள். ஒவ்​வொன்​றி​லும், சம மதிப்​பெண்​கள் கொண்ட நூறு வினாக்​கள். தவறான விடைக்​கு, மதிப்​பெண் குறைப்பு இல்​லை. கேள்​வித்​தாளைப் பார்த்த மாத்​திரத்​தில் தோன்​றுகிற முதல் எண்​ணமே - ‘ஆஹா... எத்​தனை எளி​தாக இருக்கிறது!'.

ஆனால், கூடவே ஒரு ஆபத்​தும் இருக்​கிறது. மிக அதிக மதிப்​பெண்​கள் பெற்​றால் மட்​டுமே அடுத்த நிலைக்​குச் செல்ல முடி​யும். அதாவது ‘கட் ஆப்' மதிப்​பெண், வழக்​கத்தை விட அதி​க​மாக இருக்​கவே வாய்ப்​பு​கள் அதி​கம். தனித்​தனியே வினாக்​களைப் பார்ப்​ப​தற்கு முன்​பு... வினாத்​தாளில் அரசி​யல் கலப்பு அநேக​மாக அறவே இல்​லை. மாநில அரசுத் திட்​டங்​கள் தொடர்​பான ஓரிரு வினாக்​களும் ‘ஏற்​றுக் கொள்​ளத்​தக்க' அளவிலேயே இருந்​தன.

பொதுத் தமிழ் / பொது ஆங்​கிலப் பகுதி - பெரும்​பாலும் பள்​ளிப் பாடத் திட்​டத்தை ஒட்​டியே இருந்​தன. பொதுத்​தமிழைப் பொருத்​தமட்​டில், அகர வரிசைப்​படி சொற்​கள், சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், ஒற்​றுப் பிழை சரி செய்​தல், பிழையற்ற தொடர் காணுதல், எதிர்ச்​சொல் கண்​டறிதல் என்று நன்கு பழகிய பாதை​யிலேயே பயணித்​தது.

வணிக மேலாண்மை தொடர்​பான ஆங்​கிலச் சொற்​கள் மற்​றும் வெவ்​வேறு ஆங்​கிலச் சொற்​களின் தமிழாக்​கம் முற்​றி​லும் தமிழ் வழியே பயின்ற கிராமத்​துத் தேர்​வர்​களுக்​குக் கடின​மாக இருந்​திருக்​கக் கூடும். அந்த வகை​யில், பொது ஆங்​கிலத் தாள், தமிழை விட​வும் எளி​தாக இருக்க வாய்ப்​பு​கள் அதி​கம் என்று தோன்​றுகிறது. தவிர்த்து இருக்​கலாம்.

அடுத்து - பொது அறிவு / திறனறி​வு. அறி​வியல், கணிதம், வரலாறு பகு​தி​களில் ‘நேரடிக் கேள்வி​கள்' மிகுந்து இருந்​தன. ஆனால், பொருளா​தா​ரம் மற்​றும் சட்​டங்​கள் தொடர்​பான வினாக்​கள் சற்றே உயர் தரத்​தில் இருந்​தன. இவை, சிலருக்​கேனும் ஓரளவுக்​குக் கடின​மாக இருந்​திருக்​கக் கூடும். குளோரோஃ​பார்ம், கண்​ணீர்ப்​பு​கை, உயி​ரினங்​களில் கார்​பன், மின் காந்​தங்​களில் காந்​தப் பண்​பு​கள் ஆகியன அறி​வியல் அறி​வுக்கு ஏற்ற கேள்வி​கள்.

கணிதப் பகு​தி​தான் உண்​மை​யில் இத்​தேர்வை மிக எளிமை ஆக்​கி​யுள்​ளது. ஆட்​கள்​-வேலை, விகி​தாச்​சா​ரம், சராசரி, வட்டி விகிதம் மீதான கேள்வி​கள், குறிப்​பாக கிராமப்​புறத் தேர்​வர்​களுக்​கு, மிகுந்த மகிழ்ச்​சி, நம்​பிக்கை தந்​திருக்​கும். உ.வே.​சா.​வின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர், ‘வண்​ணப் பெட்​டிகள்', பெண்​களின் பங்​களிப்பு பற்​றிய பத்தி அதனைத் தொடர்ந்து கேள்வி​கள், இந்​திய தேசிய காங்​கிரஸின் நிறு​வனர் உள்​ளிட்ட பல வினாக்​கள் குரூப்-2 தேர்​வர்​களுக்கு மிகச் சாதா​ரணம்.

அதி​லும், கோயம்​புத்​தூர், மதுரை, நாமக்​கல், தஞ்​சாவூர் தொடர்​பான கேள்​வி, அநி​யா​யத்​துக்கு எளி​தானது! சட்​டங்​கள், குறிப்​பாக இந்​திய சாசனம் தொடர்​பான வினாக்​கள் எல்​லாமே, போட்​டித் தேர்​வுக்கு என்று சற்​றேனும் தீவிரத்​துடன் தம்​மைத் தயார்ப் படுத்​திக் கொள்​கிற தேர்​வர்​களுக்கு (மட்​டுமே) எளி​தாக இருந்​திருக்​கும்.

அவர்​களுக்​குமே கூட, முன்​னுரிமை அட்​ட​வணை வரிசை​யில் சரி​யான வரிசை ஒழுங்​கு, அடிப்​படைக் கடமை​யைக் கொண்டு வந்த சாசனத் திருத்​தம், தமிழ்​நாடு பஞ்​சா​யத்​துகள் சட்​டம், வெவ்​வேறு ஆணை​யங்​கள் ஏற்​படுத்​தப்​பட்ட ஆண்டு உள்​ளிட்​டவை சற்றே சவாலாக இருந்​திருக்​கக் கூடும்.

மகளிர் இட ஒதுக்​கீடு மசோ​தா​வின் முக்​கிய அம்​சங்​கள், தேசிய சுகா​தார சேவை, தேசிய விவ​சாய சந்​தை, தேசிய திறன் மேம்​பாட்​டுக் கழகம், தமிழ்​நாடு கிராம வாழ்​விட மேம்​பாடு, ‘இடம்​பெயர்​வு’ தொடர்​பான வினாக்​கள் மூலம், வினாத்​தாள் தயாரிப்​பில் காட்​டப்​பட்ட ‘அக்​கறை' நன்கு வெளிப்​பட்​டது.

ஏப்​ரல் 29 முதல் மே 5 வரை பிறந்​த​நாள் கொண்​டாட்​டம், மகளிர் உரிமைத் தொகை​யின் நோக்​கம், ‘நம்​மைக் காக்​கும் 48' திட்​டத்​தில் கட்​ட​ணமில்லா சிகிச்​சை​யின் உச்​சவரம்​பு, தமிழ்​நாட்​டில் உள்ள முக்​கிய குறிப்​பிடத்​தக்க எரிசக்தி ஆதா​ரம் ஆகியன மிகுந்த பொறுப்​புணர்​வுடன் முன்​வைக்​கப் பட்​டுள்​ளன. பாராட்​டுக்​கள்.

‘தூய்மை இந்​தியா இயக்​கம்' என்று தூய தமிழில் தராமல், ‘ஸ்​வச் பாரத் மிஷன்' என்று விளிக்க வேண்​டிய அவசி​யம் என்​ன..? ‘நார்​டிக்​ஸ்' என்று ஆங்​கில மொழி​யிலேயே ஏன் குறிப்​பிட வேண்டும்...? இவையெல்​லாம் தவறு இல்​லை; ஆனால் தவிர்த்து இருக்​கலாம். மற்​றபடி, ஒட்​டுமொத்​த​மாய்ப் பார்க்​கை​யில், பெரிய அளவு தவறு (அ) பிழை ஏதும் இல்​லை. வினாத்​தாள் தயாரிப்​பில், நல்ல முன்​னேற்​றம் நன்கு தெரி​கிறது. ஆணை​யத்​துக்கு மனமார்ந்த பாராட்​டுக்​கள்.

‘சு​வாரஸ்​ய​மான கேள்​வி' என்று முத்​திரை​யிட முடி​யாது என்​றாலும் ‘யோசிக்​கிறேன்​..' என்​கிற வகை​யில் உள்ள ஒரு வி​னா:

அப்​பாவி என்​னும் சொல் பிழை எனில், அச்​சொல்​லின்​ திருத்​தச்​ சொல்​லைக்​ காண்​க:

அ) அடப்​பா​வி, ஆ) அற்​பா​வி, இ) அற்​ப பா​வி, ஈ) அற்​ப ஆவி, உ) விடை தெரியவில்​லை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x