Published : 09 Sep 2025 08:13 PM
Last Updated : 09 Sep 2025 08:13 PM
சென்னை: எந்தெந்த பதவிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். ஓராண்டில் எந்தெந்த பதவிகளுக்கு எந்தெந்த போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
அந்த அட்டவணையில், போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் நாள், எழுத்துத் தேர்வு தேதி, முடிவுகள், நேர்காணல் நடைபெறும் நாள் ஆகிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அரசு பணியில் சேர விரும்புவோர் முன்கூட்டியே தேர்வுக்கு திட்டமிட்டு தயாராகவதற்கு இந்த வருடாந்திர தேர்வு அட்டவணை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
மத்திய அரசு பணியில் உயர் அலுவலர்களை தேர்வுசெய்யும் யுபிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை ஏற்கெனவே வெளியிட்டு விட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி 2026-ம்ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை எப்போது வெளியிடும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் இன்று கூறியது: 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டோம். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வு அட்டவணையை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது அட்டவணை தயாரிப்பின் இறுதி கட்டத்தில்தான் தெரியவரும்.
டிஎன்பிஎஸ்சி-யை பொருத்தவரை குறித்த காலத்தில் தேர்வு நடத்தி குறித்த காலத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் துல்லியமாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்குவது வரை காலிப் பணியிடங்களை சேர்க்கலாம். எனவே, காலியிடங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் அல்லாத பதவிகள்) உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) நேரடி நியமனத்தில் இணையான கல்வித்தகுதி தொடர்பாக சுற்றுலா துறையிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம். எனவே, விரைவில் அந்த பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பணிகள் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT