Published : 30 Jul 2025 06:15 AM
Last Updated : 30 Jul 2025 06:15 AM
சென்னை: மின் வாரியத்துக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக 258 உதவிப் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக மின் வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், அதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு மின் வாரியத்துக்கு சிவில், மெக்கானிகல் மற்றும் எலெக்டிரிக்கல் உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டது.
நேர்காணல் இல்லை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு மூலம் நேர்காணல் இல்லாமல் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில் 240 எலெக்ட்ரிக்கல் உதவிப் பொறியாளர்கள், 30 சிவில் மற்றும் 24 மெக்கானிக்கல் என மொத்தம் 258 உதவிப் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் வழி கல்வி: இவர்களில் தமிழ் வழியே படித்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் சலுகையில் தேர்வு செய்யப்பட்டவர்களை மட்டும் சான்றிதழ் சரி பார்த்த பிறகு பணியில் சேரவும், மற்றவர்கள் உடனடியாகப் பணியில் இணையவும் மேற்பார்வை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மின் வாரியத்தில் மக்கள் முதலில் அணுகக்கூடிய அதிகாரியாக இருப்பவர்கள் உதவிப் பொறியாளர்கள். மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முதல்நிலை அதிகாரிகள் உதவிப் பொறியாளர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT